இந்த ஆண்டு இயல்பைவிட அதிக மழைப்பொழிவுக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

By SG BalanFirst Published Apr 15, 2024, 11:50 PM IST
Highlights

இந்தியாவில் இந்த ஆண்டு இயல்பைவிட அதிகமான அளவு மழைபொழிவுக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்தியாவில் இந்த ஆண்டு இயல்பைவிட அதிகமான அளவு மழைபொழிவுக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதாவது சராசரி மழை அளவான 87 சென்டிமீட்டரில் 106 சதவீதத்துக்கும் மேல் மழைப்பொழிவு இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

50 ஆண்டு மழைப்பொழிவு பதிவுகளின்படி, நான்கு மாத சராசரி மழைப்பொழிவு 87 செமீ ஆகும். இதில் 96% முதல் 104% மழை பெய்தால், அது சராசரி அல்லது சாதாரண மழைப்பொழிவு என்று இந்திய வானிலை ஆய்வு மையம் வரையறுத்துள்ளது.

"2024ஆம் ஆண்டில் ஜூன் முதல் செப்டம்பர் வரையான தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் நாடு முழுவதும் மழைப்பொழிவு இயல்பை விட அதிகமாக இருக்கும்" என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

பருவகால மழைப்பொழிவு 5% கூடுதலாகவோ குறைவாகவ்வோ இருக்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் லா நினா விளைவு காரணமாக பருவமழை ஆகஸ்ட்-செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர். எம். ரவிச்சந்திரன், "1951 முதல் 2023 வரையிலான தரவுகள், லா நினா எல் நினோ நிகழ்வைத் தொடர்ந்து 9 சந்தர்ப்பங்களில், இயல்பை விட அதிகமான பருவமழையை இந்தியா அனுபவித்ததாகக் காட்டுகிறது. வடமேற்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் சில பகுதிகளைத் தவிர, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பிற்கு மேல் மழை பெய்யும்" என்று குறிப்பிட்டார்.

click me!