
இந்தியா-இஸ்ரேல் இடையே 17,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஏவுகணை ஒப்பந்தத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நாள்தோறும் இரு நாட்டு ராணுவத்துக்கிடையே கடும் மோதல் நிலவி வருகிறது, பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஒரு புறம் எல்லை தாண்டி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அந்நாட்டு ராணுவமும் இந்திய எல்லைக்குள் ஊடுருவி வருகிறது. இதற்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில் எதையும் எதிர்கொள்ள தயாராகும் வகையில் இஸ்ரேலிடம் இருந்து ஏவுகணைகள் வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்தியா-இஸ்ரேல் இடையே தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்டு இந்த ஆண்டுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகிறது. இஸ்ரேலிடமிருந்து ராணுவ தளவாடங்களை அதிகமாக கொள்முதல் செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக திகழ்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு இறுதியில் இஸ்ரேல் பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு முன்னதாக இரு நாடுகளுக்கும் இடையே மிகப்பெரிய ஏவுகணை ஒப்பந்தத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
17,000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தின்படி இந்திய ராணுவத்திற்கு, தரையில் இருந்து வான் இலக்கை தாக்கவல்ல நடுத்தர ரக ஏவுகணைகள் மற்றும் கடற்படைக்காக நீண்டதூர ஏவுகணைகள் தயாரிக்கப்படவுள்ளன. மொத்தம் 200 ஏவுகணைகள் மற்றும் 40 தாக்குதல் அலகுகள் தயாரிக்க ஒப்பந்தத்தில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.