Ukraine Russia War: மருந்து உள்ளிட்ட பொருட்கள் அனுப்பிவைக்கப்படும்... உக்ரைனுக்கு உதவும் இந்தியா!!

By Narendran SFirst Published Feb 28, 2022, 8:21 PM IST
Highlights

உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையில் தேவையான உதவிகளை செய்ய இந்தியா தயாராக உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார். 

உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையில் தேவையான உதவிகளை செய்ய இந்தியா தயாராக உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா 5வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவில் ரஷ்யா- உக்ரைன் படைகள் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. போரால் உக்ரைன் நாட்டு மக்கள் பலர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதேபோல், உக்ரைன் மற்றும் ரஷ்ய ராணுவ வீரர்கள் 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ரஷ்ய படைகளின் ஆக்ரோஷ தாக்குதல்களால், உக்ரைன் நாட்டு மக்கள் ருமேனியா, ஹங்கேரி, போலந்து உள்ளிட்ட அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். அதேபோல், உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகளின் மருத்துவ மாணவர்கள் மற்றும் பயணிகளை அண்டை நாடுகளின் வழியாக வெளிநாட்டு தூதரகங்கள் மீட்டு வருகின்றனர்.

அந்த வகையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்கும் முயற்சியில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தீவிரம் காட்டி வருகிறது. உக்ரைனின் அண்டை நாடுகளில் விமானங்கள் மூலம் இந்திய மாணவர்களை தாயகத்திற்கு அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் எடுத்து வருகின்றன. மேலும், இரவு, பகல் பாராமல் வெளியுறவுத்துறை அதிகாரிகள், உக்ரைனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். இதனிடையே உக்ரைனில்  போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, உக்ரைன்-ரஷியா இடையே சமாதான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. இந்நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ அமைப்பு நாடுகள் ராணுவ உதவிகளை வழங்கி உள்ளன. இதற்கிடையே, உக்ரைனுக்கு  மனிதாபிமான அடிப்படையில் தேவையான உதவிகளை செய்ய இந்தியா தயாராக உள்ளது. மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனுப்பப்படும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையில் தேவையான உதவிகளை செய்ய இந்தியா தயாராக உள்ளது. மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனுப்பப்படும். ஆபரேசன் கங்கா திட்டம் மூலம் 6 விமானங்களில் 1400 இந்தியர்கள் தாயகம் திரும்பி இருக்கின்றனர். புக்காரஸ்ட் விமான நிலையத்திலிருந்து 4 விமானங்களும், புதாபெஸ்ட் நகரில் இருந்து 2 விமானங்களும் இந்தியா வந்தடைந்தன. உக்ரைனிலிருந்து 8000 இந்தியர்கள் வெளியேறி உள்ளனர். அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் 3 விமானங்கள் இயக்கப்பட உள்ளன. இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதே இந்திய அரசின் நோக்கம். தூதரகத்தை தொடர்பு கொண்ட பின்னரே மாணவர்கள் உக்ரைன் எல்லையை கடந்து செல்ல வேண்டும். மாணவர்கள் மேற்கு உக்ரைன் பகுதிகளுக்கு சென்று பாதுகாப்பாக இருக்க வேண்டும்.  இந்தியர்களை மீட்கும் முயற்சியில் மத்திய அமைச்சர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு சென்றுள்ளனர். அவர்கள் மீட்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர் என்று தெரிவித்தார். 

click me!