உக்ரைனில் சிக்கியுள்ள புதுவை மாணவர்களை மீட்க வேண்டும்... மத்திய அரசுக்கு ரங்கசாமி கடிதம்!!

By Narendran SFirst Published Feb 28, 2022, 8:09 PM IST
Highlights

உக்ரைனில் சிக்கிக் கொண்டுள்ள புதுச்சேரி மாணவர்களை மீட்டு பாதுகாப்பாக புதுச்சேரி அழைத்து வர வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார். 

உக்ரைனில் சிக்கிக் கொண்டுள்ள புதுச்சேரி மாணவர்களை மீட்டு பாதுகாப்பாக புதுச்சேரி அழைத்து வர வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா 5வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவில் ரஷ்யா- உக்ரைன் படைகள் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. போரால் உக்ரைன் நாட்டு மக்கள் பலர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதேபோல், உக்ரைன் மற்றும் ரஷ்ய ராணுவ வீரர்கள் 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ரஷ்ய படைகளின் ஆக்ரோஷ தாக்குதல்களால், உக்ரைன் நாட்டு மக்கள் ருமேனியா, ஹங்கேரி, போலந்து உள்ளிட்ட அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். அதேபோல், உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகளின் மருத்துவ மாணவர்கள் மற்றும் பயணிகளை அண்டை நாடுகளின் வழியாக வெளிநாட்டு தூதரகங்கள் மீட்டு வருகின்றனர்.

அந்த வகையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்கும் முயற்சியில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தீவிரம் காட்டி வருகிறது. உக்ரைனின் அண்டை நாடுகளில் விமானங்கள் மூலம் இந்திய மாணவர்களை தாயகத்திற்கு அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் எடுத்து வருகின்றன. மேலும், இரவு, பகல் பாராமல் வெளியுறவுத்துறை அதிகாரிகள், உக்ரைனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் உக்ரைனில் சிக்கிக் கொண்டுள்ள புதுச்சேரி மாணவர்களை மீட்டு பாதுகாப்பாக புதுச்சேரி அழைத்து வர வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ரங்கசாமி இரண்டாவது முறையாக கடிதம் எழுதியுள்ளார்.

ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் காரணமாக உக்ரைன் நாட்டில் தவிக்கும் புதுச்சேரி மாணவர்களை மீட்க வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இரண்டாவது முறையாக கடிதம் எழுதியுள்ளார். ஏற்கனவே கடந்த 25ஆம் தேதி பிரதமர், உக்ரைனில் உள்ள இந்திய தூதர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் எழுதி இருந்த முதலமைச்சர் ரங்கசாமி, தற்போது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இரண்டாவது முறையாக மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். இன்று அவர் எழுதி உள்ள கடிதத்தில், உக்ரைனில் சிக்கிக் கொண்டுள்ள புதுச்சேரியை சேர்ந்த 23 மாணவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வழங்க இந்திய தூதரகம் மூலம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், அவர்களை விரைவில் பாதுகாப்பாக புதுச்சேரி கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

click me!