இந்தியா புதிய ஆற்றலால் நிறைந்துள்ளது: பிரதமர் மோடி பெருமிதம்!

By Manikanda Prabu  |  First Published Sep 19, 2023, 6:07 PM IST

இந்தியா புதிய ஆற்றலால் நிறைந்துள்ளது. நாம் வேகமாக வளர்ந்து வருகிறோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்


நாடாளுமன்ற சிறப்பு அமர்வின்போது பழைய நாடாளுமன்ற மைய மண்டபத்தில் உறுப்பினர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான உறுதியுடனும் தீர்மானத்துடனும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி நாம் செல்கிறோம்.” என்றார்.

நாடாளுமன்றக் கட்டிடம் மற்றும் மைய மண்டபம் பற்றிப் பேசிய பிரதமர், அதன் உத்வேகமூட்டும் வரலாறு குறித்தும் பேசினார். தொடக்க ஆண்டுகளில் கட்டிடத்தின் இந்தப் பகுதி ஒரு வகையான நூலகமாகப்  பயன்படுத்தப்பட்டதை அவர் நினைவுகூர்ந்தார்.  இந்த இடத்தில்தான் அரசியல் சாசனம் உருவானது என்பதையும், சுதந்திரத்தின் போது அதிகார மாற்றம் நடந்தது என்பதையும் பிரதமர் மோடி நினைவுகூர்ந்தார்.

Latest Videos

undefined

1952-ம் ஆண்டுக்குப் பிறகு உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 41 நாடுகள் மற்றும் அரசுத் தலைவர்கள் இந்திய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் உரையாற்றியுள்ளனர்.  இந்தியாவின் பல  குடியரசுத் தலைவர்கள் 86 முறை மைய மண்டபத்தில் உரையாற்றியுள்ளனர் என்று பிரதமர் தெரிவித்தார். கடந்த எழுபது ஆண்டுகளில் மக்களவையும் மாநிலங்களவையும் சுமார் நான்காயிரம் சட்டங்களை நிறைவேற்றியுள்ளன என்று அவர் கூறினார்.

வரதட்சணை தடுப்புச் சட்டம், வங்கிப் பணியாளர் தேர்வாணைய மசோதா மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான சட்டங்கள் பற்றிக் குறிப்பிட்டார். முத்தலாக் தடைச் சட்டத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சட்டங்கள் பற்றியும் பிரதமர் மோடி எடுத்துரைத்தார். 370ஆவது பிரிவை ரத்து செய்வதில் மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பை எடுத்துரைத்த பிரதமர், நமது முன்னோர்கள் நமக்கு வழங்கிய அரசியலமைப்பு இப்போது ஜம்மு காஷ்மீரில் செயல்படுத்தப்படுகிறது என்று பெருமிதம் தெரிவித்தார்.

"பாரதம் ஆற்றல் நிறைந்தது" என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, புதுப்பிக்கப்பட்ட இந்த உணர்வு ஒவ்வொரு குடிமகனுக்கும் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புடன் அவர்களின் கனவுகளை நனவாக்க உதவும் என்றார். தேர்ந்தெடுக்கப்பட்ட பாதையில் இந்தியா பலன்களைப் பெறுவது உறுதி என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். “விரைவான முன்னேற்ற விகிதத்துடன் விரைவான பயன்களைப் பெற முடியும்”, என்று அவர் மேலும் கூறினார்.

முதல் ஐந்து பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா  முன்னேறியிருப்பது பற்றி  குறிப்பிட்ட பிரதமர், முதல் மூன்று பொருளாதாரங்களுக்குள் நுழையும் என்று உலகமும் இந்தியாவும் நம்புவதாகக் கூறினார். இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு, யுபிஐ மற்றும் டிஜிட்டல் பயன்பாடுகள் மீதான உலகின் ஆர்வத்தை அவர் குறிப்பிட்டார். இந்த வெற்றி உலகை வியக்க வைக்கும், ஈர்க்கும் மற்றும் ஏற்றுக்கொள்ளும் விஷயம் என்று அவர் கூறினார்.

தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், இந்தியாவின் தற்சார்பு மாதிரி பற்றி உலகம் பேசுகிறது என்றார். உற்பத்தித் துறையில் இந்தியா புதிய உயரங்களை எட்ட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், "முடிவெடுப்பதை தாமதப்படுத்த முடியாது" என்று கூறியதோடு, மக்கள் பிரதிநிதிகளை அரசியல் லாபங்கள்  அல்லது இழப்புகளால் கட்டுப்படுத்த முடியாது என்றார்.

வந்தே பாரத் ஸ்லீப்பர், மெட்ரோ, சாதரண ரயில்கள்: எப்போது அறிமுகம்?

பனிப்போர் காலத்தில் இந்தியா நடுநிலை நாடாகக் கருதப்பட்டது, ஆனால் இன்று இந்தியா 'உலகின் நண்பன்' என்று அழைக்கப்படுகிறது. இந்தியா நட்புறவுக்காக மற்ற நாடுகளை அணுகுகிறது, அதே நேரத்தில் அவை இந்தியாவில் ஒரு நண்பரை எதிர்பார்க்கின்றன என்று பிரதமர் குறிப்பிட்டார்.

தற்போதைய கட்டிடத்தின் பெருமையும், கண்ணியமும் எப்பாடுபட்டாவது பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், அதை பழைய நாடாளுமன்ற கட்டிடம் என்ற நிலைக்குத் தள்ளிவிடக் கூடாது என்றும் குடியரசு துணைத் தலைவர் மற்றும் மக்களவைத் தலைவரிடம் பிரதமர் மோடி அப்போது கேட்டுக் கொண்டார்.

click me!