
இந்தியா, முதலில் இந்துக்களுக்கான நாடு; பிறகுதான் மற்ற மதத்தினருக்கானது என சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.
சிவசேனா கட்சியின் பத்திரிகையான சாமனாவில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில் இந்த கருத்து பதிவிடப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், இந்தியா இந்துக்களின் நாடு; ஆனால் அதற்காக மற்றவர்களுக்கான நாடு இல்லை என அர்த்தமில்லை என ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சிவசேனா கட்சி, இந்தியா முதலில் இந்துக்களுக்கான நாடு; பிறகுதான் மற்றவர்களுக்கானது என கருத்து தெரிவித்துள்ளது.
இஸ்லாமியர்களுக்கு 50க்கும் மேற்பட்ட நாடுகளும் கிறிஸ்தவர்களுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் புத்த மதத்தினருக்கு சீனா, ஜப்பான், இலங்கை, மியான்மர் உள்ளிட்ட நாடுகளும் உள்ளன. ஆனால் இந்துக்களின் நாடாக இருக்கும் ஒரே நாடு இந்தியா மட்டும் தான். எனவே இந்தியா, முதலில் இந்துக்களுக்கானது; அடுத்துதான் மற்றவர்களுக்கானது என சிவசேனா தெரிவித்துள்ளது.
இந்துத்துவா சார்பு கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தும், தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலை அனைவரையும் பாட வைக்கமுடியவில்லை. தேசிய கீதத்திற்கு எழுந்து நின்று மரியாதை செலுத்துவதை உறுதி செய்யமுடியவில்லை.
இதுபோன்ற விவகாரங்களில் எடுக்க வேண்டிய நிலைப்பாடுகள் குறித்து இந்துத்துவா சார்பு மத்திய அரசை ஆர்.எஸ்.எஸ் வழிநடத்த வேண்டும் எனவும் சிவசேனா வலியுறுத்தியுள்ளது.