
இந்தியா சார்பில் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட முதல் நீச்சல் வீரர் ஷாம்ேசர் கான் மாரடைப்பு காரணமாக நேற்று மரணமடைந்தார். இவருக்கு வயது 87.
ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், கைதேபல்லே கிராமத்தில் ஷாம்சேர் கான் வாழ்ந்து வந்து வந்த நிலையில் உயிரிழந்தார்.
கடந்த 1956ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் நீச்சல் பிரிவில் பங்கேற்ற முதல் வீரர் ஷாம்சேர் கான் என்பது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டில் நடந்த 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் தேசிய அளவில் சாதனையை படைத்ததைத் தொடர்ந்து ஷாம்சேர் கானுக்கு ஒலிம்பிக் வாய்ப்பு கிடைத்தது.
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக அப்போது இந்திய அரசு 300 ரூபாய் கடனாக வழங்கியது. அதன்பின், ராணுவத்தில் பணியாற்றியபோது அந்த தொகை கழித்துக் கொள்ளப்பட்டது. இந்த போட்டியில் அவர் பங்கேற்றபோதிலும் பதக்கம் ஏதும் பெறவில்லை. ஆனால், இன்றும் இந்திய அளவில் ‘பிரீஸ்ட் ஸ்டைலில்’ ஷான்சேகர் செய்த சாதனையை எந்த வீரரும் முறியடிக்கவில்லை.
கடந்த ஆண்டு ஷாம்சேர் கான் ஒரு நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “ இந்திய ராணுவத்தில் நான் சேர்ந்ததே ஒரு விபத்தாகும். என் உறவினர் ஒருவருக்கு துணையாக ராணுவ தேர்வுக்கு சென்று இருந்தேன், அதில் நானும் பங்கேற்க எனது உறவினர் கூற நான் விளையாட்டாக கலந்துகொள்ள தேர்வாகிவிட்டேன்.
அதன்பின், 1946ம் ஆண்டு நடந்த இந்தியா-சீனா போரிலும், 1971-ம் ஆண்டு நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரிலும் நான் பங்கேற்று இருக்கிறேன். 24 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றி 1973ம் ஆண்டு ஓய்வு பெற்றேன். ஆனால், ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் வீரர் என்ற அடிப்படையில் அரசு எந்தவிதமான சலுகையும் அளிக்கவில்லை’’ என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இதயநோயால் அவதிப்பட்டு வந்த ஷாம்சேர் கான் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மரணமடைந்தார்.