
புதுச்சேரி அரசு உயரதிகாரிகள், ஊழியர்களிடம் தீபாவளி பரிசு பொருட்களை வாங்கக் கூடாது என்றும் அப்படி மீறி தீபாவளி பரிசு பெற்றால் அது குற்றமாக கருதப்படும் என்றும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி எச்சரித்துள்ளார்.
புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமிக்கும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே அதிகார மோதல் நீடித்து வருகிறது. ஆளுநர் - முதலமைச்சர் பிரச்சனையால் அரசு அதிகாரிகள் பணி செய்வதில் குழப்பம் நிலவுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலை நீடித்தால், புதுச்சேரியின் எதிர்கால வளர்ச்சியும், மக்களின் நல்வாழ்வும் கேள்விக்குறியாகி விடும் என்றும் புதுச்சேரி மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, புதுச்சேரியில் துணிச்சலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆளுநரின் இந்த செயல்பாடு அவருக்கு மக்கள் மீது ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில், துணை நிலை ஆளுநர் ஈடுபட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு 5 கிலோ மீட்டர் நடை பயணம் மேற்கொண்டார்.
அதேபோல் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக புதுவை ஆளுநர் மாளிகையில் ரத்ததான முகாம் நடத்தினார். இதில் கிரண்பேடி உட்பட ஆளுநர் மாளிகை ஊழியர்களும் ரத்ததானம் செய்தனர்.
வீட்டின் முன் குப்பைகளைத் தேக்கினாலோ அல்லது மழை நீர் தேங்கும் நிலையில் இருந்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது நகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தார். மேலும் அபராத கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
இன்னும் சில தினங்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி, புதுச்சேரி அரசு உயரதிகாரிகள், தங்கள் ஊழியர்களிடம் பரிசு பொருட்களை பெறக் கூடாது என்று கூறியுள்ளார். அப்படி மீறி தீபாவளி பரிசு பெற்றால் அது குற்றமாக கருதப்படும் என்றும் புதுவை ஆளுநர் கிரண்பேடி எச்சரித்துள்ளார்.