உயிர்காக்கும் மருந்து விஷயத்தில் இந்தியாவின் குடுமி சீனாவின் கையில்..!

By karthikeyan VFirst Published Jun 19, 2020, 3:55 PM IST
Highlights

இந்தியாவின் ஒட்டுமொத்த மருந்து உற்பத்தியும் சீனாவை சார்ந்தே உள்ளது. 
 

இந்தியா - சீனா இடையேயான எல்லை விவகாரத்தின் விளைவாக, சீன பொருட்களின் ஏற்றுமதிக்கு தடை, சீன பொருட்கள் புறக்கணிப்பு ஆகிய குரல்கள் இந்தியாவில் வலுத்துள்ளன. இந்தியா - சீனா இடையேயான வர்த்தகம் பாதித்தால், சீனாவை விட இந்தியாவுக்குத்தான் பாதிப்பு அதிகம். 

சீனாவிலிருந்து 68 பில்லியன் அமெரிக்கன் டாலர் மதிப்பிற்கு இறக்குமதி செய்யும் இந்தியா, வெறும் 16 பில்லியன் அமெரிக்கன் டாலர் மதிப்பிற்கு மட்டுமே ஏற்றுமதி செய்கிறது. சீனாவுடன் தான் இந்தியா மிகமோசமான வணிக பற்றாக்குறையை கொண்டிருக்கிறது. வர்த்தக அல்லது வணிக பற்றாக்குறை என்பது, ஒரு குறிப்பிட்ட நாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் மதிப்பைவிட ஏற்றுமதி செய்யும் மதிப்பு எந்தளவிற்கு குறைவாக இருக்கிறது என்பதுதான். அப்படி பார்த்தால், இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை, சீனாவுடன் தான் அதிகமாகவுள்ளது. அந்தளவிற்கு இந்தியா - சீனா வர்த்தகத்தில் சீனா ஆதிக்கம் செலுத்துகிறது.

குறிப்பாக மருந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களுக்கு இந்தியா, சீனாவையே பெருமளவில் சார்ந்துள்ளது. மருந்து உற்பத்தியில் சிறந்து விளங்கும் இந்தியா, மருந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களை 90% சீனாவிலிருந்து தான் இந்தியா இறக்குமதி செய்கிறது. இந்தியா மருந்து உற்பத்தியில் சிறந்து விளங்கி, மேலை நாடுகளுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்தாலும், மருந்து உற்பத்திக்கான, ஏபிஈ(active pharmaceutical ingrediants) என்ற மூலப்பொருட்களில் 90%-ஐ சீனாவிலிருந்து தான் இறக்குமதி செய்கிறது இந்தியா. 

உயிர்காக்கும் மருந்துகள் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் அனைத்தையும் சீனாவிலிருந்தே இறக்குமதி செய்கிறோம். பெனிசிலின் ஜி, லெவடோபா ஆகியவற்றை 100% சீனாவிலிருந்தே இறக்குமதி செய்துகொண்டிருக்கிறோம். டெட்ராசைக்லின் 77%, அசிக்ளோவிர் 66% சீனாவிலிருந்து தான் வருகின்றன. 

ஜெனரிக் மருந்துகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் என ஒட்டுமொத்த இந்தியாவின் மருந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் 90% சீனாவை நம்பியே இருக்கும் நிலையில், சீனாவுடனான வர்த்தகத்தை துண்டிக்க நினைத்தால், பதிலடி கொடுக்கும் வகையில் சீனா, மருந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களை வழங்கவில்லை என்றால் பாதிப்பு இந்தியாவுக்குத்தான். மருந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களை வழங்குவதை குறைத்தாலே, அது இந்தியாவிற்கு பாதிப்பாகத்தான் அமையும். 

ஏபிஐ உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு கொண்ட நாடாக உருவாவதற்கு, மருந்து மூலப்பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு சலுகைகளை வழங்கி உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும் என மருந்துத்துறை வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதேபோல உயிர்காக்கும் மருந்தான பெனிசிலின்-ஜி, நோய் எதிர்ப்பு மருந்துகள் அதிகமாக உற்பத்தி செய்வதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும். 

பெனிசிலின் உற்பத்தியில் சீனா தனிக்காட்டு ராஜாவாக திகழ்கிறது. 100% பெனிசிலின் - ஜி-யை சீனாவிலிருந்து இந்தியா உற்பத்தி செய்கிறது. எனவே மருந்து மூலப்பொருட்கள் உற்பத்தியில் இந்தியா கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. 
 

click me!