
கேரள மாநிலம் மலப்புரத்தில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த 38 வயது நபருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மருத்துவர்களின் கட்டுப்பாட்டில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இது இந்தியாவில் உறுதி செய்யப்பட்ட இரண்டாவது குரங்கம்மை பாதிப்பு ஆகும்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திரும்பியதும் மலப்புரத்தைச் சேர்ந்த 38 வயது நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், குரங்கம்மையின் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற்று சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.
குரங்கம்மை பாதிக்கப்பட்ட நோயாளி தனிமைப்படுத்தப்பட்டு, இந்திய மருத்துவ கூட்டமைப்பின் நெறிமுறைகளின்படி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்தார்.
குரங்கம்மை - சின்னம்மை: இரண்டுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?
சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து திரும்பிய அந்த நபருக்கு நோயின் அறிகுறிகள் தென்பட்டன. உடல்நிலை சரியில்லாததை அடுத்து, அவர் முதலில் தனியார் மருத்துவமனையிலும், பின்னர் மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டார். பின்னர் அவரது மாதிரிகள் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரிக்கு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
கடந்த 9 நாட்களுக்கு முன்பு இந்தியாவில் முதல் குரங்கம்மை பாதிப்பு பதிவானது. மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து பயணம் செய்த இளைஞர் ஒருவருக்கு டெல்லியில் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் அவரும் தற்போது நலமுடன் உள்ளார். மேலும் வைரஸ் பரவாமல் தடுக்க தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் பொதுமக்களுக்கு பரவலான அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் 'கிளேட் 2' வைரஸ் இருப்பதை சோதனை உறுதிப்படுத்தியுள்ளது என்றும், இந்த குறிப்பிட்ட விகாரம் "2022 ஜூலை முதல் இந்தியாவில் முன்னர் பதிவான 30 வழக்குகளைப் போன்றது" என்றும் விளக்கியது.
உலக சுகாதார அமைப்பால் (WHO) தெரிவிக்கப்பட்டபடி, குரங்கம்மை வைரஸின் கிளேட் 1 ஐ உள்ளடக்கிய தற்போதைய உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையுடன் இந்த வழக்கு இணைக்கப்படவில்லை என்று அரசாங்க செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு ஒரு ஆலோசனையை வெளியிட்டது. மேலும் குரங்கம்மை என சந்தேகிக்கப்படும் அனைத்து நோயாளிகளையும் பரிசோதனைக்கு உட்படுத்தவும், உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளைத் தனிமைப்படுத்தவும், நோய் பரவும் அபாயத்தைக் குறைக்க தொடர்புத் தடமறிதல் ஆகியவற்றையும் பரிந்துரைத்தது.
குரங்கம்மை என்பது சின்னம்மை போன்ற ஒரு வைரஸ் நோயாகும். இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட நபர் அல்லது விலங்குடன் நெருங்கிய தொடர்பு மூலமாகவோ அல்லது வைரஸால் பாதிக்கப்பட்ட பொருட்கள் மூலமாகவோ மனிதர்களுக்கு பரவுகிறது. இந்த ஆண்டு, குரங்கம்மை பாதிப்பு 160 சதவீதம் அதிகரித்துள்ளது. இது 10 ஆப்பிரிக்க நாடுகளை பாதித்துள்ளது.