டோக்லாம் பகுதியில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெற இரு நாடுகளும் முடிவுசிக்கிம் மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ளது டோக்லாம் பகுதி. இங்கே இந்திய சீன படைகளுக்கு இடையே ஏற்பட்ட பதட்ட நிலையை அடுத்து, இரு நாடுகளின் தரப்பிலும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். இதனிடையே இப்பகுதியில், நிறுத்தப்பட்டிருக்கும் கூடுதல் ராணுவ வீரர்களை வாபஸ் பெற இந்தியா மற்றும் சீனா முடிவு செய்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘டோக்லாம் பகுதியில் கடந்த 70 நாட்களாக இரு நாடுகளின் சார்பிலும் கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டிருந்தன. கடந்த சில வாரங்களாக இரு நாடுகளின் சார்பிலும் தூதரக ரீதியாக டோக்லாம் பிரச்னை குறித்து பேசப்பட்டது. பேச்சுவார்த்தையில் இரு தரப்பு கருத்துக்கள், கவலைகள், எண்ணங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இதைத் தொடர்ந்து டோக்லாம் பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் கூடுதல் படைகளை வாபஸ் பெறுவது என இரு தரப்பிலுமே முடிவு செய்யப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.