தமிழ்நாடு, டெல்லி, பஞ்சாப், மகாராஷ்டிரா: காங்கிரஸ் கேட்கும் தொகுதிகள்!

By Manikanda Prabu  |  First Published Jan 10, 2024, 4:37 PM IST

இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி கேட்கும் சில தொகுதிகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன


பாஜகவை வீழ்த்த ஓரணியில் திரண்டுள்ள எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் சமீபத்திய கூட்டம் தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. அதில், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்க தீர்மாணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதற்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

அதேசயம, நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுப்பதற்காக ஒவ்வொரு மாநிலங்களை சேர்ந்த மாநிலத் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகளுடன் காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை நடத்தி வருகிறது. ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், மூத்த தலைவர் முகுல்வாஸ்னிக் உள்ளிட்டோர் காங்கிரஸ் தேர்தல் தொகுதி பங்கீட்டு குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

Latest Videos

undefined

அதில், விவாதிக்கப்படும் விஷயங்கள், தொகுதிகளின் அடிப்படையில் கூட்டணிக் கட்சிகளிடம் தங்களுக்கான தொகுதிகளை கேட்டு காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, கடந்த மாதம் 29, 30 ஆகிய தேதிகளில் தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில், மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, செல்வபெருந்தகை, எம்.பி.க்கள் ப.சிதம்பரம், மாணிக்கம் தாக்கூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல், மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி), தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடனும், டெல்லி, பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியுடனும் காங்கிரஸ் கட்சி முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி முடிந்துள்ளது. குறிப்பாக, ஆம் ஆத்மியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சாதகமாக உள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இரு கட்சிகளுக்கு இடையேயும் உரசல் போக்கு நீடித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் இந்த தகவல் கூட்டணிக்குள் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. அதேபோல், பேச்சுவார்த்தை சிறப்பாக இருந்ததாக ஆம் ஆத்மியும் தெரிவித்துள்ளது.

இந்த பின்னணியில், தமிழ்நாடு, பஞ்சாப், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி கேட்கும் சில தொகுதிகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, டெல்லியில் மொத்தமுள்ள 7 மக்களவை தொகுதிகளில் 4 தொகுதிகளை காங்கிரஸ் கேட்டுள்ளது. ஆனால், 3 தொகுதிகளை தர ஆளும் ஆம் ஆத்மி கட்சி முன்வந்துள்ளது. இதற்கு காங்கிரஸ் சம்மதம் தெரிவித்து விட்டதாக தெரிகிறது. கிழக்கு டெல்லி, வடகிழக்கு மற்றும் சாந்தினி சவுக் தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் கட்சி சார்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதேபோல், ஆம் ஆத்மி ஆளுங்கட்சியாக இருக்கும் பஞ்சாபில் உள்ள 13 தொகுதிகளில் 6 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு விட்டு தர ஆம் ஆத்மி முன்வந்துள்ளது. இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லாமல் இந்த பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. மீண்டும் தலைவர்கள் கூடி விவாதித்த தொகுதிகள் இறுதி செய்யப்படும் என தெரிகிறது. இந்த பேச்சுவார்த்தையின்போது இரு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் ஒன்றிணைந்து செயல்பட உறுதி பூண்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் நேர்மறையாக பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் தேனி தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. எனவே, அந்த 10 தொகுதிகளுடன் சேர்த்து, கூடுதலாக 8 என மொத்தம் 18 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து திமுகவிடம் காங்கிரஸ் தொகுதி பங்கீட்டு குழு விரைவில் பேசவுள்ளது.

கூட்டணிக்குள் மேலும் சில கட்சிகள் வர வாய்ப்புள்ளதாலும், தங்களது பலத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாலும், கடந்த முறையை விட குறைவான தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க திமுக திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், குறைந்தது 15 தொகுதிகளயாவது கேட்டுப் பெற வேண்டு என முகுல் வாஸ்னிக் தமிழக தலைவர்களிடம் கூறியதாக டெல்லியில் வரும் தகவல்கள் கூறுகின்றன.

கடந்த முறை வெற்றி பெற்ற தொகுதிகளோடு சேர்த்து ஈரோடு, கள்ளக்குறிச்சி, கடலூர், திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல் உள்ளிட்ட தொகுதிகளை கேட்டுப்பெற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் தற்காலிக வாபஸ்!

மகாராஷ்டிரா மாநிலத்தை பொறுத்தவரை மொத்தம் 48 தொகுதிகள் உள்ளன. இதில், சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சி 23 தொகுதிகளை கேட்கிறது. மீதமுள்ள 25 தொகுதிகளை மகாவிகாஸ் அகாடி கூட்டணியில் உள்ள காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பிரித்துக் கொள்ள வேண்டும் என்பதால், கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சஞ்சய் ராவத் கூறுகையில், “கடந்த மக்களவைத் தேர்தலில் நாங்கள் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். எங்கள் கட்சியிலிருந்து சில எம்.பி.க்கள் தற்போது விலகியுள்ளனர். இருந்தபோதும் எங்களுக்கு 23 தொகுதிகள் தேவை. தேசியவாத காங்கிரஸ் கட்சி வென்ற இடங்கள் குறித்து நாங்கள் பேசவில்லை. இதனால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் எங்களுக்கு கருத்து வேறுபாடுகள் எழப் போவதில்லை.” என்றார்.

இன்னும் ஓரிரு நாட்களில் கூட்டணி கட்சித் தலைவர்கள் பேசி முடிவெடுப்பர். அதற்கு பிறகு இறுதி முடிவெடுக்கப்படும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் பிரவீன் குந்தே பாட்டீல் தெரிவித்துள்ளார். எனவே, சோனியா காந்தி, உத்தவ் தாக்கரே, சரத்பவார் ஆகியோர் விரைவில் சந்தித்து பேசுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!