இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் நடைபெறவுள்ளது
பாஜகவுக்கு எதிராக ஓரணியில் திரண்டுள்ள எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் ஜூலை மாதம் பெங்களூருவிலும் நடைபெற்றது. இதையடுத்து, இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் நடைபெற்றது.
இந்தியா கூட்டணியில் ஏற்கனவே 26 அரசியல் கட்சிகள் இருந்த நிலையில், சமீபத்தில் இரண்டு புதிய பிராந்திய அமைப்புகள் அக்கூட்டணியில் இணைந்தன. எனவே, மொத்தம் 28 கட்சிகள் தற்போது இந்தியா கூட்டணியில் உள்ளன.
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் மும்பை கூட்டத்தில் இந்தியா கூட்டணியை ஒருங்கிணைக்க 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, பிரசாரம், சமூக ஊடக குழுக்கள் என மொத்தம் 4 குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஒருங்கிணைப்பு குழுவில் இடம்பெற்றுள்ள 13 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஒருவரது பெயர் மட்டும் இன்னும் வெளியிடப்படவில்லை.
பாரத குடியரசுக்கு பின்னால் இருக்கும் அரசியல்: கனிமொழி!
இந்த நிலையில், இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் இல்லத்தில் வருகிற 13ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தகவலை சிவசேனா (யுபிடி) தலைவர் சஞ்சய் ராவத் உறுதிபடுத்தியுள்ளார்.
டெல்லியில் நடைபெறவுள்ள இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டத்தில் மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.