இஸ்ரோ முதல் கோவிட்-19 வரை! சுதந்திர இந்தியாவின் வியக்க வைக்கும் அறிவியல் தொழில்நுட்ப சாதனைகள்

By SG Balan  |  First Published Aug 6, 2023, 5:46 PM IST

சுதந்திரத்திற்குப் பின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் சாதனைகள் மற்றும் முன்னேற்றங்களை இத்தொகுப்பின் மூலம் திரும்பிப் பார்க்கலாம்.


இந்தியா அதன் அறிவியல் தொழில்நுட்பத் திறனுக்காக உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 1970 களில் காலநிலை அக்கறை கொண்ட சிப்கோ இயக்கம் நிகழ்ந்த நிலம், பொக்ரான்-II போன்ற வெற்றிகரமான அணுசக்தி சோதனைகள் நடத்தப்பட்டதும் இங்கேதான். அறிவியலுக்கான நோபல் பரிசு பெற்ற சர் சி. வி. ராமன், அண்ணா மணி போன்ற அறிவியல் மேதைகள் பிறந்த நாடு இது.

சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா அறிவியல் கண்டுபிடிப்பில் வேகம் பெற்றுள்ளது. ஜனநாயக ஆட்சி நமது செழுமையை மீட்டெடுக்கவும் வரும் ஆண்டுகளைத் திட்டவும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை ஊக்குவிக்கிறது. இத்தனை ஆண்டுகளில் இந்தியா தனது திறன்களையும் வளங்களையும் ஒருங்கிணைத்து பெரிய மாற்றத்தைக் கண்டுள்ளது.

Tap to resize

Latest Videos

இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்ற பிறகு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் செய்த பல சாதனைகள் மற்றும் முன்னேற்றங்களை இங்கே திரும்பிப் பார்க்கலாம்.

1947 - 1957

ஐந்தாண்டுத் திட்டத்தில் அறிவியல் தொழில்நுட்பம்

விவசாயம், அறிவியல், உள்கட்டமைப்பு மற்றும் கல்வி போன்ற முக்கிய துறைகளில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைத் திட்டமிடும் நோக்கத்துடன் 1950ஆம் ஆண்டு திட்டக் குழு அமைக்கப்பட்டது. முதல் திட்ட வரைவு ஜூலை 1951இல் வழங்கப்பட்டது. அதில், 'அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி' என்ற தலைப்பில் ஒரு பிரத்யேக அத்தியாயம் இருந்தது. முதல் திட்டமாக, இது நாட்டில் அறிவியல் ஆராய்ச்சியின் அடித்தளத்தை அமைப்பதற்கு முன்னுரிமை அளித்தது. தேசிய ஆய்வகங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்களை உருவாக்குதல், மேம்படுத்துவதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.

இது தேசிய அளவில் பதினொரு ஆராய்ச்சி நிறுவனங்களை அங்கீகரித்து நாட்டின் எதிர்கால வளர்ச்சியில் அவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது. இதில் இந்தியாவின் தேசிய இயற்பியல் ஆய்வகம் (டெல்லி), தேசிய இரசாயன ஆய்வகம் (புனே, மகாராஷ்டிரா) மற்றும் மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (காரைக்குடி, தமிழ்நாடு) ஆகியவை அடங்கும். இந்த நிறுவனங்களில் சில நியூக்ளியஸ் யூனிட்களை மட்டுமே கொண்டிருந்தன. அவற்றின் விரிவாக்கத்திற்கு அதிக முதலீடு தேவைப்பட்டது. ஆய்வகங்கள் முழுமையாகச் செயல்படுவதற்குத் தேவையான உபகரணங்களை நிறுவுவதற்கும், கட்டிடங்களை நிறைவு செய்வதற்கும் திட்டமிடப்பட்டது.

இது மூன்று புதிய நிறுவனங்களை அமைக்கவும் முன்மொழிந்தது: ரேடியோ மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆராய்ச்சி நிறுவனம்; இயந்திர பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம்; மத்திய உப்பு ஆராய்ச்சி நிலையம்.

1957 - 1967

விவசாய ஆராய்ச்சி மற்றும் 'பசுமைப் புரட்சி'

சுதந்திரத்திற்குப் பிறகு, விவசாய உற்பத்தியைக் கட்டுப்படுத்துவது ஒரு முக்கியப் பணியாக இருந்தது. நாட்டின் பயிர் விளைச்சல் திறன், நீர்ப்பாசன முறைகள், பயனுள்ள உரங்கள், பூச்சிக்கொல்லிகள், மின் ஆதாரங்கள், விவசாய உபகரணங்கள் பற்றிய ஆய்வுகள் குறைவாகவே இருந்தன.

அந்தச் சூழலில் விவசாயத்தை முன்னேற்ற அறிவியல் ஆராய்ச்சிக்கு அரசு முன்னுரிமை அளித்தது. இது இந்த பத்தாண்டுகளில் பசுமைப் புரட்சிக்கு வழிவகுத்தது. இதன் மூலம் 1947இல் வீழ்ச்சியின் விளிம்பில் இருந்த இந்தியாவின் விவசாயப் பொருளாதாரம் சீராக முன்னேற முடிந்தது. உணவு தானியங்களை இறக்குமதி செய்பவராக இருந்த இந்தியா, உபரியாக உற்பத்தி செய்யும் நிலையை நோக்கிப் பயணிக்க வைத்தது.

1967 - 1977

ஆர்யபட்டா - இந்தியாவின் முதல் செயற்கைக்கோள்

விண்வெளி அறிவியலில் இந்தியாவின் பங்களிப்பு மகத்தானது. இஸ்ரோ என்று அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தேசிய விண்வெளி ஆய்வு நிறுவனமாக செயல்பட்டுவருகிறது. இந்த நிறுவனம் 1969ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்நிறுவனம் மூலம் விண்ணுக்கு அனுப்பிய முதல் இந்திய செயற்கைக்கோள் ஆர்யபட்டா.

ஆரியபட்டா விண்கலம் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது. ஏப்ரல் 19, 1975இல் விண்ணில் ஏவப்பட்டது. எக்ஸ்ரே வானியல், சூரிய இயற்பியல் போன்றவை குறித்த ஆராய்ச்சிக்கு இஸ்ரோ ஆர்யபட்டாவை உருவாக்கியது. இது விண்வெளி ஆராய்ச்சியில் இஸ்ரோ செய்துவரும் சாதனைகளுக்கு ஆரம்பமாக அமைந்தது.

1977 - 1987

அக்னி - இந்தியாவின் முதல் ஏவுகணை

1980களில் இந்தியா வெற்றிகரமாக மூலோபாய ஏவுகணை அமைப்புகளை உருவாக்கியது. 1989இல் அக்னி ஏவுகனை சோதனை வெற்றிகரமாக முடிந்தது. ஏவுகணைகளைக் கட்டுப்படுத்தவும், வழிநடத்தவும், உந்துவிசை அளித்தல் போன்ற பல திறன்களை செயல்படுத்த முடிந்தது. அதன்பிறகு, இந்தியா பல ஏவுகணைகளை உருவாக்கி, சோதனை செய்து, செயல்படுத்தி வருகிறது. அக்னி ஏவுகணைகளின் வரிசையாக மாறியது. சமீபத்தில் அக்னி-வி ஏவுகணை 2018இல் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

1987 - 1997

டிஎன்ஏ அடிப்படையில் கைரேகை சோதனை

இந்தியாவில் டிஎன்ஏ அடிப்படையிலான கைரேகை சோதனை 1988இல் நடைமுறைக்கு வந்தது. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலும் (CSIR), செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையமும் (CCMB) இந்தத் நுட்பத்தை உருவாக்கி அதைப் பயன்பாட்டுக்கு அளித்தது. இந்தத் தொழில்நுட்பத்தை சொந்தமாக உருவாக்கிப் பயன்படுத்தும் மூன்றாவது நாடு என்ற பெருமையையும் இந்தியா  அடைந்தது.

1997 - 2007

பொக்ரான்-II அணு ஆயுத சோதனை

1998ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி, ராஜஸ்தானின் பொக்ரானில் இந்தியா ஐந்து அணுகுண்டுகளை நிலத்தடியில் வெற்றிகரமாகச் சோதித்தது. இந்தச் சோதனைகளுக்கு 'பொக்ரான்-II' என்று பெயரிடப்பட்டது.

வளர்ந்து வரும் ஜனநாயகத்தின் தொழில்நுட்ப சாதனையை எளிதாக்கும் வகையில், இந்த நாள் தேசிய தொழில்நுட்ப தினமாக அறிவிக்கப்பட்டது. அதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மே 11ஆம் தேதி தேசிய தொழில்நுட்ப தினம் கடைபிடிக்கப்படுகிறது.

2007 - 2017

சந்திரயான்-I நிலவுப் பயணம்

இந்தியாவின் முதல் நிலவுப் பயணமாக சந்திரயான்-I விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இது 22 அக்டோபர் 2008 அன்று ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. சந்திரனைச் சுற்றி இருக்கும் ரசாயனம், புவியியல் மற்றும் கனிமவியல் வரைபடங்களை இஸ்ரோவுக்கு வழங்குவதற்காக இந்த விண்கலம் அனுப்பப்பட்டது.

போலியோ இல்லாத இந்தியா

1994ஆம் ஆண்டில் உலகளாவிய போலியோ நோயாளிகளில் சுமார் 60 சதவீதத்தினர் இந்தியாவில் இருந்தனர். அரசாங்கம் ஒவ்வொரு குழந்தைக்கும் தடுப்பூசி போடுவதற்காக தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ததன் விளைவாக, போலியோ இல்லாத நாடாக இந்தியா மாறியுள்ளது. மார்ச் 27, 2014 அன்று உலக சுகாதார நிறுவனத்திடமிருந்து (WHO) 'போலியோ இல்லாத நாடு'  என்ற சான்றிதழையும் இந்தியா பெற்றது.

சிறந்த சுகாதார வல்லுநர்கள் மற்றும் முன்னணி சமூகப் பணியாளர்களின் அர்ப்பணிப்பு காரணமாக இந்த நோய்த்தடுப்பு இயக்கம் வெற்றி பெற்றது. இந்தப் இயக்கத்தின் மூலம் நாட்டின் பின்தங்கிய மற்றும் கிராமப்புற பகுதிகளில் தடுப்பூசி போடத் தயங்குபவர்களிடம் அதன் பாதுகாப்பு மற்றும் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்தது.

செவ்வாய் கிரகத்தை ஆராயும் மங்கள்யான்

இந்தியாவின் கிரகங்களுக்கு இடையிலான முதல் விண்வெளிப் பயணம் மங்கள்யான் மூலம் நிகழ்ந்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்டது. விண்வெளி ஆய்வுத் துறையில் இந்தியாவின் முக்கியத்துவத்தை உறுதி செய்வதாகவும் அமைந்தது.

நவம்பர் 5, 2013இல் மங்கள்யான் விண்ணில் செலுத்தப்பட்டது. செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பு, உருவவியல், கனிமவியல் மற்றும் வளிமண்டலம் ஆகியவற்றை ஆய்வு செய்தது. விஞ்ஞான முன்னேற்றங்களைத் தவிர, அதன் குறைந்த செலவினத்திற்காகவும் மங்கள்யான் திட்டம் பாராட்டப்படுகிறது.

ஸ்டார்ட் அப் இந்தியா

இந்தியாவில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கான அமைப்பை உருவாக்கும் நோக்கில் 2016 ஜனவரி 16ஆம் தேதி 'ஸ்டார்ட்அப் இந்தியா' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பிறகு, இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இத்துறை இன்று வேகமாக வளர்ந்து வருகிறது.

ஜூலை 2021 நிலவரப்படி, நாட்டில் 52,000 க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் உள்ளன. இது இந்தியாவை உலகின் மிகப்பெரிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் களமாக மாற்றியுள்ளது. இந்த ஸ்டார்ட் அப்கள் மூலம் 5 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. தகவல் தொழில்நுட்ப சேவைகள், சுகாதாரம், கல்வி, வணிக சேவைகள், உணவு மற்றும் பானங்கள், விவசாயம், நிதி தொழில்நுட்பம், தொழில்நுட்ப வன்பொருள், கட்டுமானம் மற்றும் பசுமை தொழில்நுட்பம் ஆகியவை இந்தியாவில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஈர்க்கும் முதல் பத்து துறைகளாக உள்ளன.

2017 முதல்

ககன்யான் திட்டம்

ககன்யான் திட்டம் மனிதனை விண்வெளிக்கு அனுப்புவதற்கான வடிவமைக்கப்பட்டது. இந்தத் திட்டம் எதிர்காலத்தில் இந்தியா மனிதனை விண்வெளிக்கு அனுப்பி ஆய்வு செய்வதற்குத் திறமையான மற்றும் பயனுள்ள களத்தை அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ககன்யான் திட்டத்தின் கீழ் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் பயணத்துடன், இரண்டு ஆளில்லா பயணங்களும் மேற்கொள்ளப்பட உள்ளன. இது இந்தியாவின் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ஆய்வுத் திட்டத்தின் முதல் படியாக அமைகிறது.

கோவிட்-19 தடுப்பூசி

இந்தியா தடுப்பூசி ஆராய்ச்சியில் முன்னணியில் இருக்கிறது. கோவிட்-19 (COVID-19) தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் உலகளாவிய முயற்சியில் இந்தியா மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளராகவும் ஏற்றுமதியாளராகவும் மாறியது. 2021ஆம் ஆண்டின் இறுதியில், 90க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 7 கோடிக்கும் அதிகமான கோவிட்-19 தடுப்பூசி டோஸ்களை இந்தியா வழங்கியுள்ளது. இதுமட்டுமின்றி, இந்தியாவில் செயல்படுத்தப்பட்ட கோவிட்-19 தடுப்பூசி இயக்கம் பல நாடுகளுக்கும் முன்னோடியாக அமைந்தது. பிப்ரவரி 2022 நிலவரப்படி, 170 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் போட்டப்பட்டிருந்தன.

இந்தியாவின் அறிவியல் தொழில்நுடப் வளர்ச்சி இவ்வாறு பற்பல பரிணாமங்களில் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது.

click me!