
வருமானவரி, கார்பரேட் வரி ஆகியவற்றை செலுத்தாமல் ரூ.448 கோடி பாக்கி வைத்துள்ள 29 நிறுவனங்களின் பெயர்களை நாளேடுகளில் வருமான வரித்துறை வெளியிட்டது.
நாட்டின் முன்னணி நாளேடுகளில் வந்துள்ள இந்த விளம்பரத்தில், இந்த 29 நிறுவனங்கள் வைத்துள்ள வரி பாக்கி, நிறுவனத்தின் முகவரி, பான் கார்டு எண் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு உடனடியாக வரிபாக்கியை செலுத்துங்கள் என வருமான வரித்துறை குறிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே இது போல் அதிகமான வரிபாக்கி வைத்துள்ள 67 நிறுவனங்களின் பெயர்களையும் நாளேடுகளில் வருமான வரித்துறை வெளியிட்டது. இந்த 67 நிறுவனங்களும் கண்டுபிடிக்க முடியாமலும், அதன் சொத்துக்கள் இருக்கின்றன என்பது தெரியாமலும் இந்த விளம்பரம் வெளியிடப்பட்டது.
இது குறித்து வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ வருமான வரித்துறைக்கு வருமானவரி, கார்ப்பரேட் வரி பாக்கி வைத்துள்ள தனிநபர்கள், நிறுவனங்கள், பான் கார்டு எண்கள், கடைசியாக நிறுவனம் இருந்த முகவரி, எங்கு நிறுவனம் செயல்பட்டது என்பதற்கான சான்று, வரிபாக்கி ஆகியவற்றை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும், அந்த நிறுவனங்கள் குறித்து வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காக நாளேடுகளில் விளம்பரம் செய்யப்பட்டது.
இந்த விளம்பரத்தால் நிறுவனங்கள் வைத்துள்ள வரி பாக்கி, அந்த ஆண்டு பாக்கி வைத்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. ஏறக்குறைய 29 மோசடியாளர்கள் ரூ.448.02 கோடி வரி பாக்கி வைத்துள்ளனர்’’ எனத் தெரிவித்தார்.