
டெல்லியில், லாலு பிரசாத் யாதவின் மகள் மற்றும் குடும்பத்தாரின் 12 வீடுகள் உள்ளிட்ட பினாமி சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
லாலு பிரசாத்தின் மகள் மிசா பாரதி, மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கிறார். அவர் பங்குகள் வைத்துள்ள நிறுவனங்களில் பினாமி சொத்துகள் பரிமாற்றம் நடப்பதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக வருமான வரித்துறையினர் சமீபத்தில் திடீர் சோதனை நடத்தினர்.
அதைத் தொடர்ந்து சுமார் ரூ.1000 கோடிக்கு பினாமி சொத்து பரிமாற்றம் மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.
மேலும் மிசா பாரதி, அவருடைய கணவர் சைலேஷ் குமார், அவரின் தந்தை ராகினி, சந்தா, பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி ஆகியோரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
டெல்லியில் உள்ள வீடு மற்றும் நிலம் ஆகியவற்றை வருமான வரித் துறையினர் முடக்கி உள்ளனர். இந்த 2 சொத்துகளும் பினாமியின் வசம் இருக்கிறது. மிசா பாரதி, அவரது கணவர் சைலேஷ் குமார் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டி உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நடவடிக்கை குறித்து பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், “ அரசியல் உள்நோக்கத்துடன் மத்தியஅரசு வருமானவரித்துறையை ஏவிவிடுகிறது. அரசியல் பழிவாங்கும் செயல். இதைக்கண்டு அஞ்சமாட்டோம்.தொடர்ந்து வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக போராடுவோம்’’ எனத் தெரிவித்தார்.