
தமிழகத்தில் வெளிநாட்டு குளிர்பானங்களான பெப்சி, கோக் புறக்கணிப்பு என்பது ஜனநாயக மதிப்புகளுக்கு விரோதமானது, இதனால், கள்ள சந்தைக்கே வழிவகுக்கும் என்று மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தெரிவித்துள்ளார்.
மேலும், மேக் இந்தியா திட்டத்தில் தயாரிக்கப்படும் கோக், பெப்சி புறக்கணிப்பு என்பது அந்த திட்டத்துக்கே எதிரானது என இந்திய குளிர்பானங்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
கோரிக்கை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜல்லிக்கட்டுப்போட்டிக்கு ஆதரவாக போராட்டம் நடந்தபோது, மாணவர்கள் சார்பில் வெளிநாட்டு குளிர்பானங்களான பெப்சி, கோக் விற்பனை செய்ய வேண்டாம் என வணிகர்கள் சங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மார்ச் 1-ந்தேதி
இதை ஏற்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம். விக்ரமராஜா, தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் ஆகியோர், மார்ச் 1-ந்தேதி முதல் தமிழகத்தில் வணிகர்கள் பெப்சி, கோக் பானங்களை கடைகளில் விற்பனை செய்யமாட்டார்கள் என அறிவித்தனர். இதையடுத்து, கடந்த 1-ந்தேதி முதல் கடைகளில் கோக், பெப்சி பானங்கள் விற்பனை கடுமையாகச் சரிந்துள்ளது. மக்களும், 15 லட்சம் வணிகர்களும் பெப்சி, கோக் பானங்களின் விற்பனையை முழுமையாக புறக்கணித்து வருகின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் பெப்சி, கோக் புறக்கணிப்புக்கு இந்திய குளிர்பானங்கள் அமைப்பு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “ தமிழகத்தில் வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு எழுந்துள்ள எதிர்ப்பு என்பது, அடிப்படை பொருளாதார வளர்ச்சிக்கு எதிரானது, பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்துக்கு விரோதமானது, நுகர்வோர்கள் தங்களின் விருப்பப்படி தேர்வு செய்தும் நுகரும் பழக்கத்துக்கும் எதிரானது.
5 லட்சம் பேர்
மக்கள் எதிர்க்கும் கோக், பெப்சி நிறுவனங்கள் இந்திய அரசின் சட்டப்படி , விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு இங்கு பதிவு செய்யப்பட்டவையாகும். நுகர்வோர்களின் கலாச்சாரத்தையும், உணர்வுகளையும் மதிக்கின்றன. நேரடியாகவும், மறைமுகவும் தமிழகத்தில் 2 ஆயிரம் குடும்பங்களுக்கு இரு நிறுவனங்களும் வேலைவாய்ப்பு அளித்து வருகின்றன. டெலிவரி போன்றவற்றின் மூலம் 5 ஆயிரம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. 2 லட்சம் சில்லரை விற்பனையாளர்களின் வாழ்க்கைத் தரத்தை இந்த நிறுவனங்கள் உயர்த்தி இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் மூலம் தமிழகத்தில் உள்ள சில்லரை விற்பனையாளர்கள் ரூ.400 கோடி வரை ஈட்டியுள்ளனர்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயக விரோதம்
மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் நேற்று கூறுகையில், “ தமிழகத்தில் பெப்சி, கோக் புறக்கணிப்பு என்பது, நாட்டின் ஜனநாயக மதிப்புகளுக்கு விரோதமானது. இது கள்ளச்சந்தையைத்தான் ஊக்குவிக்கும். இந்த விசயத்துக்கு பின்புலத்தில் இருக்கும் அரசியல் இருந்து வருகிறது. இந்த குளிர்பானங்களை தடை செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை, ஏனென்றால், தடை செய்தால், கள்ளசந்தை உருவாகும். ஊழலை வளர்க்கும் ஜனநாயக நாடு என்ற முறையில் எதை உண்ண வேண்டும் என்ற உரிமை இருக்கிறது'' எனத் தெரிவித்தார்.