முதலில் மம்தா.. இப்போ பினராயி விஜயன்.. 'ஆளுநர்' கொடுக்கும் குடைச்சல்கள்.. மீண்டும் 'சர்ச்சை'

Published : Feb 21, 2022, 11:58 AM IST
முதலில் மம்தா.. இப்போ பினராயி விஜயன்.. 'ஆளுநர்' கொடுக்கும் குடைச்சல்கள்.. மீண்டும் 'சர்ச்சை'

சுருக்கம்

நாட்டில் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் அம்மாநில ஆளுநர்களுக்கும் அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாகத் தமிழகம், கேரளா. மேற்கு வங்கத்தில் ஆளுநர்களின் செயல்பாடுகளை மாநில அரசுகள் விமர்சித்து வருகின்றன.

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் ஆளுநர் ஜெகதீப் தங்காருக்கும் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வரும்  நிலையில், கடந்த 12ம் தேதி மாநில சட்டசபையை முடக்கி வைப்பதாக ஆளுநர் அறிவித்தார். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆளுநர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. 

ஆனால், மேற்கு வங்காள அரசு கேட்டுக்கொண்டதன் பேரிலேயே சட்டசபை முடக்கி வைக்கப்பட்டதாக ஆளுநர் விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில், அடுத்த மாதம் 7ம் தேதி சட்டமன்றத்தை கூட்ட, ஆளுநருக்கு முதல்வர் மம்தா பானர்ஜி பரிந்துரை கடிதம் அனுப்பியிருந்தார். அந்த கடிதத்தை ஆளுநர் ஜெகதீப் தங்கார் திருப்பி அனுப்பி உள்ளார். 

இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள ஆளுநர், அரசியலமைப்புச் சட்டத்தின்படி சட்டமன்றத்தைக்  கூட்ட முதலமைச்சரின் பரிந்துரை மட்டும் போதாது, அமைச்சரவையின் பரிந்துரையும் அவசியம் என்றும் கூறி உள்ளார். ஆளுநரின் இந்த செயலால் மேற்கு வங்காள அரசியலில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் இப்படியிருக்க, கேரளாவிலும் புது பிரச்னை உருவாகியிருக்கிறது. கேரளாவில் பினராய் விஜயன் தலைமையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு ஆரிப் முகமது கான் கவர்னராக உள்ளார். சமீபத்தில் கேரளாவில் உள்ள பல்கலை கழக துணை வேந்தர் நியமனத்தில் கவர்னருக்கும், மாநில அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இந்த நிலையில் கவர்னருக்கு சமீபத்தில் தனி உதவியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டார். தற்போது இந்த விவகாரமும் சர்ச்சையானது. இதனை கேரள எதிர் கட்சியான காங்கிரஸ் கட்சியும் விமர்சித்தது. இதுபோல ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியின் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் கவர்னரின் செயல்பாட்டை விமர்சித்தார்.கவர்னரின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாகி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக கவர்னர் ஆரிப் முகமது கான் செய்தியாளர்களிடம் பேசிய போது, ‘கேரளாவில் உள்ள மந்திரிகளில் பலருக்கு 20-க்கும் மேற்பட்ட உதவியாளர்கள் உள்ளனர்.2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊழியர்கள் மாற்றப்படுகிறார்கள். அவர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் என அரசின் பணம் வழங்கப்படுகிறது. இது அரசிற்கு நிதி சுமையை ஏற்படுத்துகிறது.

மாநில மக்களின் பணத்தை தவறாக பயன்படுத்த யாருக்கும் அதிகாரம் இல்லை. அரசியல் அமைப்பிற்கு உட்பட்டு மாநில அரசின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். கவர்னர் மாளிகையை யாரும் கட்டுப்படுத்த வேண்டாம். அரசுக்கும் இதற்கு உரிமை இல்லை. நான் ஜனாதிபதிக்கு மட்டுமே பதிலளிக்க வேண்டும்’ என்று கூறினார். ஆளுநர் - முதல்வர் ஆகியோருக்கு இடையேயான உரசல்கள் தொடர்ந்து நீடித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

செய்த பாவத்திற்குப் பிராயச்சித்தம்.. திருப்பதி திருட்டு வழக்கில் ரவிக்குமார் வாக்குமூலம்!
என் புருஷன் என்னை ஏமாத்திட்டாரு.. பிரதமர் மோடியிடம் பாகிஸ்தான் பெண் உருக்கமான கோரிக்கை!