IAF rescue Nandi hill : 300 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞர்.. இந்திய விமானப்படை துணிச்சல் சம்பவம் !!

Published : Feb 21, 2022, 09:53 AM ISTUpdated : Feb 21, 2022, 10:48 AM IST
IAF rescue Nandi hill : 300 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞர்.. இந்திய விமானப்படை துணிச்சல் சம்பவம் !!

சுருக்கம்

பெங்களூரு நந்தி மலையில் செங்குத்தான பாறையில் விழுந்த பொறியியல் மாணவர் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டார்.

பெங்களூரு அருகே சிக்பள்ளாப்பூரை அடுத்த நந்தி கிராமத்தில் ‘நந்திமலை’ உள்ளது. பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான இங்கு வார இறுதி நாட்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர்  வருவார்கள். இந்த நிலையில் விடுமுறை தினமான நேற்று பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டியில் வசித்து வரும் கொல்கத்தாவை சேர்ந்த நிஷாந்த் என்ற 19 வயது இளைஞர் தனது உறவினர்கள் சிலருடன் நந்திமலைக்கு சென்று இருந்தார்.

அப்போது, நந்திமலை அடிவாரத்தில் இருந்து வனப்பகுதி வழியாக மலையின் உச்சிக்கு நிஷாந்தும், அவரது உறவினர்களும் மலையேற்றம் சென்றனர். அப்போது சுமார் 300 அடி உயரத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மலையில் இருந்து நிஷாந்த் தவறி பள்ளத்தில் விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கதறினர்.

பள்ளத்தில் தவறி விழுந்த நிஷாந்தின் நிலை என்ன என்பது சிறிது நேரம் தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் நிஷாந்தின் செல்போனில் இருந்து உறவினர் ஒருவருக்கு அழைப்பு வந்தது. அப்போது ஒரு மரத்தில் தான் சிக்கி உள்ளதாகவும், என்னை மீட்கும்படியும் அவர் கூறியுள்ளார். 

இதுகுறித்து சிக்பள்ளாப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு நிஷாந்தின் உறவினர்கள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர், நந்திமலை போலீசார் 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்த நிஷாந்தை மீட்க நடவடிக்கை எடுத்தனர். ஆனால் தீயணைப்பு படையினரால் நிஷாந்தை மீட்க முடியவில்லை. 

இந்த நிலையில் நிஷாந்தை மீட்க கர்நாடக அரசு அல்லது மத்திய அரசு ஹெலிகாப்டர் அனுப்பி உதவ வேண்டும் என்று உறவினர்கள் செல்போனில் வீடியோ மூலம் பேசி கோரிக்கை விடுத்து இருந்தனர். இந்த நிலையில் சிக்பள்ளாப்பூர் மாவட்ட கலெக்டர் லதா, மாநில அரசை தொடர்பு கொண்டு பேசி நிஷாந்தை மீட்க ஹெலிகாப்டரை அனுப்பி வைக்கும்படி கேட்டு இருந்தார்.

இதையடுத்து எலகங்காவில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி மையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரை கர்நாடக அரசு, நந்திமலைக்கு அனுப்பி வைத்து இருந்தது. அந்த ஹெலிகாப்டரில் சென்ற ராணுவ வீரர்கள், பள்ளத்தில் தவறி விழுந்த நிஷாந்தை தேடினர். நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் மரத்தில் சிக்கி இருந்த நிஷாந்தை ராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்டனர். 

பின்னர் அவரை ஹெலிகாப்டரில் அழைத்து வந்து எலகங்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் ராணுவ வீரர்கள் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நிஷாந்தை பத்திரமாக மீட்ட ராணுவ வீரர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். இளைஞர் மீட்கப்பட்ட அந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பீகாரில் திருப்பதி கோயில்! 1 ரூபாய்க்கு 10.11 ஏக்கர் நிலம் வழங்கிய நிதிஷ் குமார்!
சாவு எப்படியெல்லாம் வரும் பார்த்தீங்களா! நியூயார்கில் இந்திய மாணவி உயிரி**ழப்பு! நடந்தது என்ன?