
மகாராஷ்டிரா அரசின் ‘லாட்கி பாஹின் யோஜனா' என்ற மகளிர் நலத் திட்டத்தில் 12,431 ஆண்கள் உட்பட ஆயிரக்கணக்கான தகுதியற்றவர்கள் பலன் அடைந்து வந்தது தெரியவந்துள்ளது. அவர்களுக்கு ரூ.164 கோடிக்கும் அதிகமாக நிதி வழங்கப்பட்டிருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலம் தெரியவந்துள்ளது.
சமூகத்தில் பின்தங்கிய மற்றும் ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் ஈட்டும் குடும்பங்களைச் சேர்ந்த 21 முதல் 65 வயது வரையிலான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 நிதி உதவி வழங்கும் இத்திட்டம், கடந்த 2024 ஜூன் மாதம் சட்டமன்றத் தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியான தரவுகளின்படி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை (WCD) மேற்கொண்ட சரிபார்ப்பில், குறைந்தது 12,431 ஆண்கள் இத்திட்டத்தில் பயனாளிகளாகச் சேர்க்கப்பட்டு, 13 மாதங்களுக்கு ரூ.1,500 பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டதிதல் ஆண்களுக்கு மட்டும் சுமார் 24.24 கோடி ரூபாய் தவறுதலாகச் செலுத்தப்பட்டுள்ளது.
இதேபோல், இத்திட்டத்தில் பயன்பெறத் தகுதியற்ற 77,980 பெண்களும் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் 12 மாதங்களுக்கு நிதி வழங்கப்பட்டதன் மூலம், அரசுக்கு சுமார் ரூ.140.28 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, தகுதியற்றவர்களைச் சேர்த்ததன் மூலம் அரசுக்கு ரூ.164.52 கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது.
சரிபார்ப்புக்குப் பின், இந்த ஆண்கள் மற்றும் தகுதியற்ற பெண்கள் என அனைவரும் பயனாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.
இதுதவிர, இந்தத் திட்டத்தின் கீழ் தவறான முறையில் பலன் பெற்றவர்களில், ஆண்கள் உட்படக் குறைந்தது 2,400 அரசு ஊழியர்களும் அடங்குவர் எனவும் தெரியவந்துள்ளது. இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
வருமானத்தை தவறாகக் காண்பித்தல், ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டோர் பலன் பெறுதல், ஒரே நேரத்தில் பல அரசு திட்டங்களின் கீழ் பலன் பெறுதல் போன்ற காரணங்களால் இந்த முறைகேடு நடந்துள்ளது.
முன்னதாக, மாநில தகவல் தொழில்நுட்பத் துறையின் மூலம் பெறப்பட்ட ஆரம்பத் தகவலின்படி, சுமார் 26 லட்சம் பயனாளிகள் தகுதிக்கான அளவுகோல்களைப் பூர்த்தி செய்யவில்லை என்று தெரியவந்தது. இதையடுத்து, ஜூன்-ஜூலை 2025ல் 26.34 லட்சம் சந்தேகத்துக்குரிய கணக்குகளுக்கு நிதி வழங்குவது நிறுத்தப்பட்டது.
தற்போது, இத்திட்டத்தின் கீழ் சுமார் 2.41 கோடி பெண்கள் மாதந்தோறும் பலன் பெற்று வருகின்றனர். எனினும், தவறாகப் பணம் பெற்றவர்கள் மீது இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பணத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையும் தொடங்கப்படவில்லை.
இந்தத் திட்டத்தை அவசரமாகத் தொடங்கி, முறையான சரிபார்ப்பு இல்லாமல் செயல்படுத்தியதே முறைகேடுகளுக்குக் காரணம் என அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் முறைகேடுகளைத் தடுக்க, அனைத்துப் பயனாளிகளுக்கும் e-KYC சரிபார்ப்பு தொடங்கப்பட்டுள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.