
முன்னாள் போபால் நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யா சிங் தாக்கூர், பெற்றோர் தங்கள் மகள்களை இந்து அல்லாதவர்களின் வீட்டிற்குச் செல்லாமல் தடுக்க வேண்டும் என்றும், மீறிச் சென்றால் அவர்களது கால்களை உடைக்க வேண்டும் என்றும் பேசியுள்ளார். பிரக்யாவின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் போபாலில் நடந்த ஒரு மத நிகழ்ச்சியில் பேசிய தாக்கூர், பெற்றோர் தங்கள் விருப்பத்திற்கு எதிராக செயல்படும் மகள்களை அடித்துத் தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
"நமது மகள் நமக்கு கீழ்ப்படியாமல், இந்து அல்லாதவரின் வீட்டிற்குச் செல்கிறாள் என்றால், அவளது கால்களை உடைக்கத் தயங்க வேண்டாம். கீழ்ப்படியாதவர்கள், பெற்றோருக்குச் செவிசாய்க்காதவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். உங்கள் குழந்தைகளின் நலனுக்காக நீங்கள் அவர்களை அடிக்க வேண்டியிருந்தால், தயங்காதீர்கள். பெற்றோர் இதுபோன்ற செயல்களைச் செய்வது, தங்கள் குழந்தைகளின் நல்ல எதிர்காலத்திற்காகவே” என்று பிரக்யா சிங் தாக்கூர் பேசியுள்ளார்.
அவரது பேச்சின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டு வைரலகியுள்ளது. மேலும் அவர், "பெற்றோருக்குக் கீழ்ப்படியாத, பெரியவர்களை மதிக்காத, வீட்டிலிருந்து ஓடிப்போகத் தயாராக இருக்கும் இத்தகைய பெண்கள் குறித்து அதிக விழிப்புடன் இருங்கள். அவர்களை உங்கள் வீடுகளை விட்டு வெளியேற விடாதீர்கள் - அவர்களை அடித்தோ, விளக்கிச் சொல்லியோ, அன்பு காட்டுடியோ, கண்டித்தோ எப்படியாவது தடுத்து நிறுத்துங்கள்," என்றும் கூறினார்.
பிரக்யா சிங் தாக்கூரின் இந்தக் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பூபேந்திர குப்தா, மத்தியப் பிரதேசத்தில், அரசுப் பதிவுகளின்படி, ஏழு மதமாற்ற வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அப்படி இருக்க, ஏன் இவ்வளவு வெறுப்பும் பரப்பப்படுகிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு முன்னதாக, பெற்றோர் தங்கள் குழந்தைகள் கட்டுப்பாட்டுடன் வளர்ப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தாக்கூர் கூறியிருந்தார்.