மக்களவைத் தேர்தல் 2024இல் குஜராத் மாநில பாஜக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட இரண்டு பேர் அடுத்தடுத்து விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
தேர்தலையொட்டி கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முடித்துள்ள அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு வருகிறது. மத்தியில் ஆளும் பாஜக இதுவரை 6 கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் 2024இல் குஜராத் மாநில பாஜக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட இரண்டு பேர் அடுத்தடுத்து தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக சிட்டிங் எம்பியும் குஜராத்தின் வதோதரா மக்களவைத் தொகுதியின் வேட்பாளருமான ரஞ்சன்பென் தனஞ்ஜெய் பட், தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முறை பொதுத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என கூறியுள்ளார். மார்ச் 14ஆம் தேதி வெளியிடப்பட்ட இரண்டாவது வேட்பாளர் பட்டியலில் ரஞ்சன் பட்டின் பெயர் இடம்பெற்றிருந்தது.
குஜராத்தின் வதோதரா மக்களவைத் தொகுதியின் சிட்டிங் எம்.பி.யாக ரஞ்சன் பட்டிற்கு, தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிட கட்சி வாய்ப்பு வழங்கியது. ஆனால், அவரது வேட்புமனு எதிர்த்து வதோதரா முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதனால், கட்சி மேலிடம் அதிருப்தியில் இருந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து அவர் விலகியுள்ளார்.
இந்தியாவில் உள்ள ஜெர்மன் தூதருக்கு மத்திய அரசு சம்மன்!
கடந்த 2014ஆம் ஆண்டு வதோதரா மக்களவைத் தொகுதிக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் ரஞ்சன் பட் முதன்முறையாக வெற்றி பெற்றார். 2014 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி வாரணாசி, வதோதரா ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றார். ஆனால், வாரணாசியை பிரதிநிதித்துவப்படுத்த பிரதமர் மோடி சென்று விட்டதால், வதோதரா தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில், ரஞ்சன் பட் முதன்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதேபோல், குஜராத மாநிலம் சபர்கந்தா தொகுதி பாஜக வேட்பாளர் பிகாஜி தாகூர் என்பவரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் அடுத்தடுத்து இரண்டு பாஜக வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்கியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.