அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து கருத்து தெரிவித்த விவகாரம் தொடர்பாக இந்தியாவில் உள்ள ஜெர்மன் தூதருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்துவதற்காக அமலாக்கத்துறை அவருக்கு தொடர்ந்து சம்மன் அனுப்பியது. இதுவரை 9 முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. அந்த சம்மன்கள் முறைகேடானது என கூறிய அவர், சம்மன்களை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், இப்போதைக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என கூறி வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 22ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது. கைது நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள், அவரை கைது செய்துள்ளனர். நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பின்போது அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஜெர்மன் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர், “இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது கவலை அளிக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். இந்தியா ஒரு ஜனநாயக நாடு நாங்கள் கருதுகிறோம், எதிர்பார்க்கிறோம். நீதித்துறையின் சுதந்திரம், அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள் இந்த வழக்கில் பின்பற்றப்படும் என நாங்கள் நம்புகிறோம். குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் எவரையும் போல, அரவிந்த் கெஜ்ரிவால் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்கு தகுதியானவர்.” என்றார்.
கெஜ்ரிவால் குற்றமற்றவர் என்ற அனுமானத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டிய அவர், தடையின்றி அனைத்து சட்ட வழிகளும் அவருக்கு கிடைக்க வேண்டும். அதற்கு அவரை அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மக்களவைத் தேர்தல் 2024: மதுரை தொகுதி - கள நிலவரம் என்ன?
இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மன் அரசுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், அர்விந்த் கெஜ்ரிவால் கைது குறித்து கருத்து தெரிவித்த விவகாரம் தொடர்பாக இந்தியாவில் உள்ள ஜெர்மன் தூதருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது. அர்விந்த் கெஜ்ரிவால் கைது குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மன் வெளியுறவு அமைச்சகத்துக்கு எதிராக இந்தியாவில் உள்ள ஜெர்மன் தூதருக்கு சம்மன் அனுப்பி மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.