
இந்தியா மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான மூலோபாய உறவுகளை வலுப்படுத்தும் வகையில், பயணிகள் விமானத்தை இரு நாடுகளும் கூட்டாகத் தயாரிக்க முடிவு செய்துள்ளன. குறுகிய தூரப் பயணங்களுக்கான இந்த சிறிய விமானங்கள் இரட்டை எஞ்சின் கொண்டவையாக இருக்கும்.
மத்ததிய அரசின் விமானத் தொழில்நுட்ப நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL), ரஷ்ய நிறுவனமான யுனைடெட் ஏர்கிராப்ட் கார்ப்பரேஷனுடன் (PJSC-UAC) உடன் இணைந்து SJ-100 ரக விமானங்களைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் திங்கட்கிழமை மாஸ்கோவில் கையெழுத்தானது.
இந்தியாவில் பயணிகள் விமானம் தயாரிப்பதற்கான இத்தகைய கூட்டு முயற்சி இதுவே முதல் முறையாகும். இந்த ஒப்பந்தம் கையெழுத்தானபோது, HAL நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டி.கே.சுனில் மற்றும் PJSC-UAC நிறுவனத்தின் தலைமை இயக்குநர் வடிம் படேகா ஆகியோர் உடனிருந்தனர்.
HAL நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, SJ-100 விமானம், இந்தியாவின் 'உடான்' (UDAN) திட்டத்தின் கீழ் குறுகிய தூர விமான இணைப்பிற்கு ஒரு திருப்புமுனையாக அமையும்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், உள்நாட்டு வாடிக்கையாளர்களுக்கான SJ-100 விமானங்களைத் தயாரிக்கும் உரிமையை HAL கொண்டிருக்கும்.
UDAN (உடான்) என்பது இந்தியாவில் பிராந்திய விமான இணைப்பை உறுதி செய்யும் நோக்குடன் கொண்டு வரப்பட்ட திட்டமாகும்.
இந்தியாவில் SJ-100 விமானங்களை உற்பத்தி செய்வது, இந்திய விமானப் போக்குவரத்துத் துறையின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக அமையும் என்று HAL தெரிவித்துள்ளது. "இது சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் 'ஆத்மநிர்பர் பாரத்' (தற்சார்பு இந்தியா) என்ற கனவை நிறைவேற்றுவதற்கான ஒரு படி," என்றும் HAL கூறியுள்ளது.
இந்த உற்பத்தி மூலம் தனியார் துறையும் வலுப்பெறும் என்றும், விமானப் போக்குவரத்துத் துறையில் நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் HAL நம்பிக்கை தெரிவித்துள்ளது.
கடந்த 1961 ஆம் ஆண்டு தொடங்கி 1988 ஆம் ஆண்டுடன் முடிவடைந்த AVRO HS-748 விமான உற்பத்தியே, HAL-இன் இதற்கு முந்தைய பயணிகள் விமானத் தயாரிப்பு திட்டமாகும். SJ-100 விமான உற்பத்தி, முழுமையான பயணிகள் விமானம் இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் நிகழ்வாக இருக்கும்.
அடுத்த 10 ஆண்டுகளில், பிராந்திய இணைப்புக்காக இந்த வகை ஜெட் விமானங்கள் 200-க்கும் அதிகமாகவும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள அருகிலுள்ள சர்வதேச சுற்றுலாத் தலங்களுக்குச் சேவை செய்ய கூடுதலாக 350 விமானங்களும் தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது வரை, 200-க்கும் மேற்பட்ட SJ-100 விமானங்கள் தயாரிக்கப்பட்டு, 16-க்கும் அதிகமான வணிக விமான நிறுவனங்களால் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஒத்துழைப்பு இரு நிறுவனங்களுக்கும் இடையேயான பரஸ்பர நம்பிக்கையின் விளைவு என்றும், இது இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் ஒரு பெரிய பாய்ச்சலாக இருக்கும் என்றும் HAL தெரிவித்துள்ளது.