
உலகின் மிகவும் குண்டான பெண் என்று கூறப்பட்ட எகிப்து நாட்டைச் சேர்ந்த இமான் அப்துல் அதிதி அபுதாபியில் உள்ள புர்ஜீல் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
அதிக உடல் எடை காரணமாக இதய நோயும், சிறுநீரகம் செயல் இழந்ததால் சிகிச்சை பலன் அளிக்காமல் அவரின் உயிர் நேற்று அதிகாலை 4.35 மணிக்கு பிரிந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எகிப்து நாட்டைச் சேர்ந்தவர் இமான் அப்துல் அதிதி(வயது36). சிறுவயதில் இருந்தே தைராய்டு நோயால் அவதிப்பட்டதால், நாளுக்கு நாள் உடல் எடை அதிகரித்து, 500 கிலோ ஆக உயர்ந்தார். இதனால் கடந்த ஜனவரி வரை உலகின் அதிக எடை கொண்ட பெண்ணாக கூறப்பட்டு வந்தார்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் உடல் எடை குறைப்பு சிகிச்சைக்காக மும்பையில் உள்ள சைபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏறக்குறைய 3 மாதங்கள் மும்பை சைபி மருத்துவமனையில் சிகிச்ைச பெற்ற இமான் அகமது 500 கிலோவில் இருந்து 323 கிலோவாக எடையைக் குறைத்தார். அதன்பின் கடந்த மே 4-ந்தேதி அபுதாபி சென்றார்.
அபுதாபியில் உள்ள புர்ஜீல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இமான் அகமதுவுக்கு உடல் எடையைக் குறைக்கும் சிகிச்சைகள் தொடர்ந்து நடந்து வந்தன. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக அறுவை சிகிச்சை ஏதும் நடக்கவில்லை.
இந்நிலையில், திடீரென இமான் அகமதுவின் சிறுநீரகங்கள் செயல் இழந்தன, இதயமும் பவீனமடைந்தது. இதையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, 20 க்கும் மேற்பட்ட டாக்டர்கள் மேற்பார்வையில் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் அதிகாலை மரணமடைந்தார்.
புர்ஜீல் மருத்துவமனையின் துணை இயக்குநர் டாக்டர் நஹீத் ஹலாவா கூறுகையில், “ இமான் அகமது நன்றாக உடல் நலம்தேறி வந்தார். ஆனால், கடந்த சில நாட்களாக திடீரென நோய்தொற்று ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டார்.
இவரின் இதயம் பலவீனமடைந்தது, சிறு நீரகங்கள் செயல் இழந்தன. நேற்று முன் தினத்தில் இருந்து உடல்நிலை மோசமானதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு 20 டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். உடல் உறுப்புகள் பல செயல் இழந்ததால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. இவரின் திடீர் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது’’ என்றார்.
இதற்கிடையே கடந்த மாதம் புர்ஜீல் மருத்துவமனையில் இமான் அகமது தனது 37-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். அப்போது, அவருக்கு பிடித்தமான சிக்கன் சான்ட்விச் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.