உஷார்… 3 ஆண்டு சிறை காத்திருக்கு… - மொபைல் ஐ.எம்.இ.ஐ. எண்ணை அழிப்பவர்களுக்கு எச்சரிக்கை

First Published Sep 25, 2017, 3:07 PM IST
Highlights
15-digit IMEI in cellphone Changing or destroying the number is a punishable offense.


செல்போனில் உள்ள 15 இலக்கம் ஐ.எம்.இ.ஐ. எண்ணை மாற்றுவதும் அல்லது அழிப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கு 3 ஆண்டுகள் வரை சிறை, அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதன் மூலம் போலி ஐ.எம்.இ.ஐ. எண் உருவாக்கப்படுவதை தடுக்கலாம் என்றும், மொபைல் போன்களை எளிதாக கண்டுபிடிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிகளின்படி, ‘மொபைல்போன் அடையாள எண்ணை சேதப்படுத்துவதை தடுத்தல்,’ விதிகள் 2017 என்ற அடிப்படையில் மத்திய தொலைத்தொடர்பு துறை அறிவிப்பு வௌியிட்டுள்ளது. இதன் மூலம் ஒரு நபர் தெரிந்தே மொபைல் போனில் உள்ள ஐ.எம்.இ.ஐ. எண்ணை மாற்றுவதும், மென்பொருள் மூலம் எண்ணை அழிப்பதும் குற்றமாகும்.

ஐ.எம்.இ.ஐ. எண் என்பது ஒவ்வொரு செல்போனுக்கும் பிரத்யேகமாக கொடுக்கப்படும் எண்ணாகும். ஒரு மொபைல் போனில் உள்ள சிம் கார்டை நாம் மாற்ற முடியும், ஆனால்,  ஐ.எம்.இ.ஐ.  எண்ணை மாற்ற முடியாது. இதை தொழில்நுட்பம் அறிந்தவர்கள், அல்லது தயாரிப்பாளர்கள் மட்டுமே மாற்ற முடியும்.

செல்போன் தொலைந்து விட்டால், அந்த செல்போனின் ஐ.எம்.இ.எண். அடிப்படையாக வைத்து எங்கு இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியும். ஆனால், தீவிரவாதிகள், சமூக விரோதிகள் சிலர் செல்போனில் உள்ள ஐ.எம்.இ.ஐ. எண்ணை அழித்தும், மாற்றியும் பயன்படுத்துவதால் சில நேரங்களில் போலீசார், பாதுகாப்பு படையினரால் எளிதாக மொபைல் போனின் இடத்தை கண்டுபிடிக்க முடிவதில்லை. இதனால், விசாரணையில் தொய்வு ஏற்படுகிறது.

மேலும், போலியாக ஐ.எம்.இ.ஐ. எண்களை தயாரித்து பயன்படுத்துவதும் தெரியவந்தது. இது தொடர்பாக தொலைத்தொடர்பு அமலாக்கம் மற்றும் கண்காணிப்பு பிரிவு நடத்திய ஆய்வில் 18 ஆயிரம் செல்போன்களுக்கு ஒரே ஐ.எம்.இ.ஐ. எண் பயன்படுத்தப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து,  கடந்த மாதம் 25-ந்தேதி மத்திய  தொலைத்தொடர்பு துறை அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது-

மொபைல் போனில் உள்ள 15 இலக்க ஐ.எம்.இ.ஐ. எண்ணை அழிப்பதும், மாற்றுவதும் சட்டவிரோதமானது. செல்போன் தயாரிப்பாளர்கள் தவிர யாரும் எந்த உள்நோக்கத்தோடும், ஐ.எம்.இ.ஐ. எண்ணை மாற்றுவதும், அழிப்பதும் சட்டப்படி குற்றமாகும். இதற்கு 3 ஆண்டுகள் வரை சிறையும், அபராதமும் விதிக்கப்படும். மேலும், டெலிகிராப் லைன், எந்திரம், அது தொடர்பான எந்திரங்களையும் சேதப்படுத்துவதற்கு இது பொருந்தும் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஒருவரின் செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடப்பட்டாலோ அந்த செல்போனில் இருந்து சிம்கார்டு எடுக்கப்பட்டாலோ, அல்லது ஐ.எம்.இ.ஐ. எண் மாற்றப்பட்டாலோ ஒட்டுமொத்த செல்போனின் செயல்பாடும் முடக்கும் திட்டத்தையும் செயல்படுத்த தொலைத்தொடர்பு துறை திட்டமிட்டுள்ளது.

click me!