
உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற பனாராஸ் இந்து பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதையடுத்து, மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை மூண்டது. போலீசார் தடியடி நடத்தியதில் மாணவர்கள், பத்திரிகையாளர்கள் காயமடைந்தனர்.
வாரணாசியில் புகழ்பெற்றது பனாராஸ் இந்து பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்காண மாணவ, மாணவிகள் பல்வேறு துறைகளில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், வியாழக்கிழமை இரவு பல்கலை விடுதியில் தங்கி பயிலும் மாணவி ஒருவர் தனது விடுதிக்கு திரும்பும் போது, பைக்கில் வந்த 3 பேர் அவரை பலாத்காரம் செய்து தப்பினர்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவி, விடுதி காப்பாளரிடம் சென்று முறையிட்டார். ஆனால், போலீசிடம் புகார் அளிப்பதற்கு பதிலாக விடுதி காப்பாளர், ‘ஏன் விடுதிக்கு தாமதமாக வந்தாய்?’ என கேட்டு திட்டியுள்ளார்.
விடுதிகாப்பாளரின் இந்த செயலைக் கண்டு ஆத்திரமடைந்த மற்ற மாணவிகள், மாணவர்களோடு சேர்ந்து பல்கலையின் பிரதான வாயில் முன் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
இரவு நேரங்களில் மாணவிகள் பல்கலையில் நடந்து வரும் போது தொடர்ந்து இதுபோன்ற பாலியல் தொந்தரவுகள் நடக்கின்றன, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டம் தொடர்ந்ததையடுத்து, பேராசிரியர்கள், பல்கலை அதிகாரிகள் , போலீசார் மாணவர்கள், மாணவிகளுடன் பேச்சு நடத்தினர். ஆனால், பல்கலையின் துணை வேந்தர் உறுதியளித்தால்தான் போராட்டத்தை திரும்பப் பெறுவோம் என மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மாணவர்கள் பல்கலையின் துணை வேந்தரை சந்தித்து முறையிடப் போவதாகக் கூறி அவரின் இல்லத்துக்கு புறப்பட்டனர். துணை வேந்தர் இல்லத்தில் அத்துமீறி நுழையச் சென்ற அவர்களை காவலாளிகள் தடுத்த போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, திடீரென கற்கள் வீசப்பட்டன.
இதையடுத்து, போலீசார் வரவழைக்கப்பட்ட நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதில் ஆத்திரமடைந்த மாணவர்கள் போலீசார் மீது கற்களை வீசி, இரு சக்கர வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர். மேலும், அங்கு செய்தி சேகரிக்க நின்று இருந்த பத்திரிகையாளர்களும் தடியடியில் காயமடைந்தனர்.
இதையடுத்து, மாவட்ட கலெக்டர் யோகேஸ்வர் ராம் மிஸ்ரா, போலீஸ் எஸ்.பி. தினேஷ் சிங் ஆகியோர் வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பல்கலையில் 1500 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், அக்டோபர் 2-ந் தேதி வரை பல்கலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
முதல்வர் ஆதித்யநாத் நிருபர்களிடம் கூறுகையில், “ பனாராஸ் பல்கலையில் நடந்த வன்முறை சம்பவங்கள், மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து முழுமையான அறிக்கை அளிக்க வாரணாசி மண்டல போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளேன்’’ என்றார்.