மக்கள் பணத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 3 பேர் உல்லாசமாக வெளிநாடு சுற்றுலா சென்றது தணிக்கை அறிக்கையில் அம்பலமாகியுள்ளது
பிசினஸ் கிளாஸ் டிக்கெட்டுகள், ஆடம்பரமான ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறைகள் மற்றும் கணக்கில் வராத செலவுகள் என 2015ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வ பயணமாக பிரான்ஸ் சென்ற 3 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளின் முறைகேடு குறித்து சண்டிகர் அரசின் தணிக்கை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களின் தலைநகரும், யூனியன் பிரதேசமுமான சண்டிகரின் நிர்வாகத்தின் ஆலோசகராக இருந்த விஜய் தேவ், சண்டிகர் உள்துறைச் செயலாளராக இருந்த அனுராக் அகர்வால் மற்றும் தனிச் செயலாளராக இருந்த விக்ரம் தேவ் தத் ஆகிய 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்தான் அந்த முறைகேட்டில் ஈடுபட்டது என்பதும் தெரியவந்துள்ளது. அந்த சமயத்தில், பஞ்சாப் முன்னாள் ஆளுநர் கப்தான் சிங் சோலங்கி சண்டிகரின் கூடுதல் பொறுப்பை வகித்து வந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
சண்டிகர் நிர்வாக வரைபடத்தை தயாரித்த சுவிஸ்-பிரெஞ்சு கட்டிடக் கலைஞர் லு கார்பூசியரின் 50ஆவது ஆண்டு விழாவைக் குறிக்கும் கூட்டம் பிரான்ஸ் நாட்டுத் தலைநகர் பாரிஸில் 2015ஆம் ஆண்டில் நடைபெற்றது. அதற்கு ஃபவுண்டேஷன் லு கார்பூசியரிடமிருந்து சண்டிகர் நிர்வாகத்திற்கு அழைப்பு வந்துள்ளது. இந்த நிகழ்வில் நான்கு பேர் கலந்து கொள்ளலாம் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி, விஜய் தேவ், விக்ரம் தேவ் தத் மற்றும் அனுராக் அகர்வால் ஆகிய மூன்று பேர் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளனர். அதற்கு, உள்துறை அமைச்சகத்தின் அனுமதியும் கோரப்பட்டு, அவர்களின் சுற்றுப்பயண திட்டமும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதில், சுவாரஸ்யம் என்னவென்றால், இந்த அதிகாரிகள் மூன்று பேரும் ஒருவருக்கொருவர் தங்களது பயணத்திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளனர். விஜய் தேவின் பயணத்துக்கு விக்ரம் தேவ் தத்தும், விக்ரம் தேவ் தத்திற்கு, விஜய் தேவும் ஒப்புதல் அளித்துள்ளனர். அனுராக் அகர்வால் பயணத்துக்கும் விஜய் தேவ் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த நிலையில், இந்த அதிகாரிகளின் பயணத்தில் முறைகேடு நடந்துள்ளதாக சண்டிகர் அரசின் தணிக்கை அறிக்கையில் தெரியவந்துள்ளது. இந்த அழைப்பின்படி, சண்டிகரின் தலைமைக் கட்டிடக் கலைஞர் கலந்து கொள்ளவேண்டிய நிகழ்ச்சியில் இவர்கள் மூவரும் கலந்து கொண்டுள்ளதாக தணிக்கை அறிக்கை கூறுகிறது. இந்த பயணத்துக்கான செலவை நிகழ்ச்சியை நடத்திய பாரீஸ் நிறுவனம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக அதிகாரிகள் மூன்று பேரின் அனைத்து செலவுகளையும் சண்டிகர் அரசு நிர்வாகம் ஏற்றுக் கொண்டுள்ளது.
அமித் ஷா காரைக்குடி வாகன பேரணி ரத்து: காரணம் என்ன
ஸ்கிரீனிங் கமிட்டியின் அனுமதியின்றி ஐந்து நாட்களுக்கு மேல் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளக்கூடாது என்ற விதியையும் அதிகாரிகள் புறக்கணித்துள்ளனர். பிரான்ஸ் நாட்டுக்கு அதிகாரிகள் மொத்தம் 7 நாட்கள் சென்றுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது. தனிக்கை அறிக்கை மூலம் வெளிவந்துள்ள முக்கியமான தகவல் என்னவென்றால், எந்த ஒப்புதலும் இல்லாமல் ஒரு நாள் சுற்றுப்பயணத்தை ஏழு நாட்களாக அதிகாரிகள் விரிவுபடுத்தியுள்ளனர்.
மூன்று அதிகாரிகளுக்கும், பிசினஸ் கிளாஸ் டிக்கெட்டுகளின் விலை ரூ. 1.77 லட்சம். இன்டர்காண்டினென்டல் ஹோட்டல் பாரிஸ் அவென்யூ என்ற நட்சத்திர ஹோட்டலில் அவென்யூ 12 ஜூன், 2015 முதல் ஜூன் 18, 2015 வரை மொத்தம் 7 நாட்களுக்கு முதலில் ரூம் போட்டுள்ளனர். இதன் விலை 3 அதிகாரிகளுக்கும் 7 நாட்கள் சேர்த்து முறையே ரூ.4,39,168, ரூ.3,42,954 ஆகும். அதன்பின்னர், Hotel Le Royal Monceau, Paris என்ற ஹோட்டலுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதன் விலை முறையே 7 நாட்களுக்கு ரூ.9,10,364, ரூ.4,43,498 ஆகும். இதன் மூலம் மட்டும் ரூ.6.7 லட்சம் கூடுதலாக செலவாகியுள்ளது.
இந்த பயணத்திற்காக விஜய் தேவிற்கு ரூ.6.5 லட்சமும், அனுராக் அகர்வாலுக்கு ரூ.5.6 லட்சமும், விக்ரம் தேவ் தத்திற்கு ரூ.5.7 லட்சமும் என மொத்தம் ரூ.18 லட்சத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்களது பயண செலவு ரூ.25 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இது அனுமதிக்கப்பட்ட தொகையை விட சுமார் 40 சதவீதம் அதிகமாகும். இது அனைத்தும் மக்கள் பணத்தில் செய்யப்பட்டுள்ளது. மக்கள் பணத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 3 பேர் உல்லாசமாக வெளிநாடு சுற்றுலா சென்றது தணிக்கை அறிக்கையில் அம்பலமாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.