பாஜகவின் வாரிசு அரசியலுக்கு தக்க பதிலடி கொடுப்பேன் என கர்நாடக மாநில முன்னாள் துனை முதல்வர் ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. அந்த வகையில், மொத்தம் 28 தொகுதிகளை கொண்ட கர்நாடகா மாநிலத்துக்கு ஏப்ரல் 26, மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடித்துள்ள அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன.
அதன்படி, ஷிவமோகா மக்களவைத் தொகுதியில் போட்டியிட கர்நாடக முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பாவுக்கு பாஜக மேலிடம் வாய்ப்பு கொடுக்கவில்லை. இதனால், கர்நாடக மாநில பாஜக தலைமைக்கு எதிராக அவர் போர்க்கொடி தூக்கியுள்ளார். ஷிவமோகா மக்களவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் அதிருப்தியில் இருந்த அவர், இதுதொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக டெல்லி சென்ற அமித் ஷாவை சந்திக்க திட்டமிட்டிருந்தார்.
undefined
ஆனால், அமித் ஷா அவரை சந்திக்க மறுப்பு தெரிவித்து விட்டார். இதனால், ஷிவமோகா மக்களவைத் தொகுதியில் முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவின் மகனும், தற்போதைய எம்பியுமான பி.ஒய்.ராகவேந்திராவை எதிர்த்து சுயேச்சையாக களம் இறங்கவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
இனி பேச்சு வார்த்தை இடமில்லை எனவும், தனது போராட்டத்தை தர்க்கரீதியான முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ள ஈஸ்வரப்பா, பாஜகவில் வாரிசு அரசியலுக்கு பாடம் புகட்ட வேண்டிய நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.
எடியூரப்பாவின் மகனை எதிர்த்து ஷிவமோகா தொகுதியில் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளதாக தெரிவித்துள்ள ஈஸ்வரப்பா, கர்நாடகா மாநில பாஜக தலைவரான பி.ஒய்.விஜயேந்திராவை (எடியூரப்பாவின் மற்றொரு மகன்) தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். அப்போதுதான் ஷிவமொகாவில் போட்டியிடும் தனது முடிவை திரும்பப் பெறுவேன் எனவும் நிபந்தனை விதித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு: என்னென்ன அம்சங்கள்?
பி.எஸ் எடியூரப்பா மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கி பேசிய ஈஸ்வரப்பா, “மாநில பாஜகவின் அதிகாரத்தை ஒரு குடும்பம் கையில் வைத்திருக்கிறது, இது இந்து காரியகர்த்தாக்கள் மற்றும் பாஜக தொண்டர்களின் உணர்வுகளை புண்படுத்துகிறது.” என சாடினார். கர்நாடக மாநில பாஜகவை ஒரு குடும்பம் கட்டுப்படுத்துவதற்கு எதிரான தனது போராட்டம் தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.
“காங்கிரஸில் வாரிசு அரசியல் பற்றி பிரதமர் மோடி பேசுகிறார். அதேபோல், கர்நாடக மாநில பாஜக ஒரு குடும்பத்தின் கையில் சிக்கியுள்ளது. அந்தக் குடும்பத்தில் இருந்து கட்சியை விடுவிக்க வேண்டும். அவர்களால் கட்சித் தொண்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொண்டர்களின் வலியை போக்க நான் போராடுவேன்.” என ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார்.
தனக்கு அரசியல் எதிர்காலம் கிடைக்காவிட்டாலும், வாரிசு அரசியலில் இருந்து கட்சியை சுத்தப்படுத்த வேண்டும் என, தன் மகன் தன்னிடம் கூறியதாகவும் ஈஸ்வரப்பா கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.