மக்களவை தேர்தல் 2024க்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி நாளை வெளியிடவுள்ளது
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. அதேசமயம், பாஜகவுக்கு எதிராக இந்தியா கூட்டணி எனும் பெயரில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. குறிப்பாக, காங்கிரஸ் கட்சி பாஜகவுக்கு எதிராக தீவிரமாக களமாடி வருகிறது. அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி இரண்டு யாத்திரைகளை நாடு முழுவதும் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். இந்த யாத்திரையின்போது, விவசாயிகள், பெண்கள், இளைனஞர்கள், தொழிலாளர்கள், அனைவரையும் உள்ளடக்கிய சமமான வளர்ச்சி ஆகிய பிரிவுகளில் தலா ஐந்து என மொத்தம் 25 வாக்குறுதிகளை ராகுல் காந்தி அளித்துள்ளார்.
எனவே, எதிர்வரவுள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் அறிக்கை குறித்து விவாதிக்க, டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டு கருத்தில் கொள்ளப்பட்டன. மேலும், அக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுத்து ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் அக்கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வழங்கப்பட்டது. அத்துடன், யாத்திரையின் போது, ராகுல் காந்தி அளித்த மேற்கண்ட 25 வாக்குறுதிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், மக்களவை தேர்தல் 2024க்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி நாளை வெளியிடவுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியிடம் இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் போது நாட்டு மக்கள் முன்வைத்த பல்வேறு முக்கிய பிரச்சனைகளுக்கு கவனம் அளிக்கும் வகையில் தேர்தல் அறிக்கையை தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்த தேர்தல் அறிக்கையில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான விலை குறைப்பு, ஜிஎஸ்டி அதிகபட்ச வரி குறைப்பு, நாடு முழுவதும் சாதி வாரிக் கணக்கெடுப்பு, பெண்களுக்கு நிதியுதவி, அனைத்து குடும்பங்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி, விவசாயிகளுக்கான திட்டங்கள், குறைந்த பட்ச ஆதரவு விலைக்கான சட்ட உறுதி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசுப் பணிகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும். ஏழைப் பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வழங்கப்படும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களின் ஊதியம் இரண்டு மடங்கு உயர்த்தப்படும். பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் உரிமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பஞ்சாயத்துக்கு ஒரு பெண் பணியாளர் நியமனம் செய்யப்படும். நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான ஒரு விடுதி கட்டப்படும்.” என பெண்களுக்கான ஐந்து வாக்குறுதிகள் வெளியிடப்பட்டுள்ளன.
Lok Sabha Election 2024 காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு என்ன?
அதேபோல், பொதுத்துறை நிறுவனங்கள் அரசு சார்ந்த நிறுவனங்கள் ஆகியவற்றில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்கள் முன்னுரிமை அடிப்படையில் நிரப்பப்படும். 25 வயதுக்குட்பட்ட டிகிரி, டிப்ளமோ படித்த அனைத்து இளைஞர்களுக்கும் ஓராண்டு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியின் போது ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும். இது சட்டமாக்க்கப்படும். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்ட உத்தரவாதம் வழங்கப்படும். சிறு தொழில்களைத் தொடங்கத் தயாராக இருக்கும் இளைஞர்களுக்கு ஆதரவாக ரூ.5000 கோடியில் ஸ்டார்ட்- அப் நிதி உருவாக்கப்படும்.
கிக் தொழிலாளர்கள் எனப்படும் உணவு டெலிவரி உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்க நாடு முழுவதும் சட்டம் இயற்றப்படும். தேர்வு தாள் கசிவு விவகாரத்தைத் தடுக்க, காகிதக் கசிவுக்கு எதிராக சட்டம் கொண்டு வரப்படும். அரசு போட்டித் தேர்வுகளை அரசு மட்டுமே நடத்தும், அவுட்சோர்சிங் எதுவும் இருக்காது.” என்ற இளைஞர்களுக்கான ஐந்து முக்கிய வாக்குறுதிகளும் காங்கிரஸ் சார்பில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. மேலும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார்.