பெட்ரோல், டீசல் விலை உயர்வு எனக்கு பாதிப்பில்லை... மத்திய அமைச்சர் பேச்சால் சர்ச்சை!

By vinoth kumarFirst Published Sep 16, 2018, 3:13 PM IST
Highlights

பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்னை பாதிக்கவில்லை, ஏனென்றால் நான் மத்திய அமைச்சர் என்று மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்னை பாதிக்கவில்லை, ஏனென்றால் நான் மத்திய அமைச்சர் என்று மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு குறைவு ஆகியவற்றால் பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் விலை உயர்ந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் இருந்து தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லி்ட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ.85.15 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.77.94 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தால், நடுத்தர மக்கள் சாமானிய மக்கள் பெரிதும் துன்பப்படுகிறார்கள். அத்தியாவசியப் பொருட்கள் விலை ஏற்றத்தாலும், பால், முட்டை, காய்கறிகள், பழங்களும் விலை உயர்ந்து வருவதால், மக்கள் சிரமத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கக் கோரி போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகின்றன.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம், ெஜய்ப்பூரில் மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் அவரிடம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு ராமதாஸ் அத்வாலே அளித்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் கூறுகையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்னை இப்போது வரை பாதிக்கவில்லை. எனக்கு மத்திய அரசு அளிக்கும் சலுகைகள், இதரபடிகளால், என்னை விலை உயர்வு எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. 

இந்த விலை உயர்வு என்னை கவலைப்படவும் வைக்கவில்லை. அதற்கு பிரதமர் மோடிக்குதான் நன்றி தெரிவிக்க வேண்டும். ஏனென்றால், தொடர்ந்து மத்திய அமைச்சராக இருப்பதால், எனக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வின் பாதிப்பு தெரியவில்லை. ஒருவேளை நான் எனது மத்திய அமைச்சர் பதவியை இழந்துவிட்டால், எனக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வின் பாதிப்பை அறியமுடியுமா எனத் தெரியவில்லை.(சொல்லி சிரித்தார்). பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் அவதிப்படுகிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். இந்த விலை ஏற்றத்தை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீது விதிக்கும் வாட் வரியையும் குறைத்து மக்களின் சிரமத்தை போக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

click me!