பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பாஜக காரணம் இல்லை: அமித் ஷா பகீர் தகவல்!

By vinoth kumarFirst Published Sep 16, 2018, 1:11 PM IST
Highlights

ட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசு காரணமல்ல, அமெரிக்காதான் காரணம் என்று பாஜக தலைவர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார். 

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசு காரணமல்ல, அமெரிக்காதான் காரணம் என்று பாஜக தலைவர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார். தெலங்கானா மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் நேற்று பங்கேற்ற பாஜக தலைவர் அமித் ஷா ஹைதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்புக் குறைவு போன்றவை பாஜகவுக்கும், மத்திய அரசுக்கும் கவலை அளிக்கிறது. இதற்கு மத்திய அரசு எந்தவிதத்திலும் காரணம் இல்லை. 

அதிகரித்துவரும் விலை உயர்வை நினைத்து பிரதமர் மோடி மிகுந்த கவலை கொண்டுள்ளார். சீனா மற்றும் பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு இடையே அமெரிக்கா நடத்தும் வர்த்தகப் போரால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பும் குறைந்து வருகிறது. அனைத்துக்கும் அமெரி்க்காவின் நடவடிக்கைதான் காரணம். பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த தீர்வு காண மத்திய அரசு விரைவில் முடிவு எடுக்கும்.  

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கைது செய்ய மகாராஷ்டிரா மாநில தர்மாதிபதி நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கும் பாஜகவுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. கடந்த 2010-ம் ஆண்டு ஆந்திரமாநிலம் பிரிக்கப்படாமல் இருந்தபோது சந்திரபாபு நாயுடு நடத்திய போராட்டத்துக்காக இந்த வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அப்போது மகாராஷ்டிராவிலும், ஆந்திராவிலும் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியில் இருந்தது.  இந்த வழக்கில் நேரில் ஆஜராகக்கோரி பலமுறை சந்திரபாபு நாயுடுவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், அவர் ஆஜராகவில்லை என்பதால், கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தின் மூலம் மக்களின் அனுதாபத்தைப் பெற சந்திரபாபு நாயுடு முயற்சிக்கிறார் எனத் தெரிவித்தார்.

click me!