
இரண்டு லட்சம் வரதட்சணைப் பணம் கொடுக்காததால், மனைவிக்கு தெரியாமலேயே அவரது கிட்னியை விற்ற கணவன் கணவன் மற்றும் மைத்துனனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கொல்கத்தாவில் நடந்துள்ளது.
ரிதா சர்கார் என்ற பெண், கொல்கத்தா போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், நான் திருமணம் ஆனதில் இருந்தே வரதட்சணை கொடுமையால், கணவன் பிஸ்வாஜித் மற்றும் அவரது குடும்பத்தாரால் கடுமையாக பாதிக்கப்பட்டேன். எங்களுக்கு 12 வயதில் மகன் உள்ளார். கடந்த 2
வருடங்களுக்கு முன்பு எனக்கு வயிற்று வலி இருந்து வந்தது. இதற்காக மருத்துவமனை சென்று வந்தேன். மருத்துவமனைக்கு எனது கணவர் பிஸ்வாஜித்தான் கூட்டிச் சென்றார். அப்போது மருத்துவர், எனக்கு குடலிறக்க பாதிப்பு உள்ளதாக கூறி ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றார். டாக்டர் கூறியதை அடுத்து ஆபரேஷனும் செய்து கொண்டேன்.
ஆனால், எனக்கு வயிற்றில் தொடர்ந்து வலி இருந்து கொண்டே வந்தது. வலி ஏற்பட்டதை தொடர்ந்து, எனது கணவரிடம் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல கூறினேன். ஆனால் அவர் அலட்சியமாக இருந்தார். இந்த நிலையில் வயிற்றி வலி மேலும் அதிகரித்தது. இதையடுத்து, எனது பெற்றோர், என்னை, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். என்னை பரிசோதித்த டாக்டர், ஒரு சிறுநீரகம் இல்லை என்பதை கூறினார். இதனைக் கேட்ட நாங்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தோம்.
மேலும் ஒரு நர்சிங் ஹோமில் என்னை, எனது பெற்றோர் பரிசோதனை செய்தனர். அவர்களும் ஒரு சிறுநீரகம் இல்லை என்பதை கூறினர். வரதட்சணை அளிக்காததால், எனது கணவர் பிஸ்வாஜித், எனக்கு தெரியாமலே ஒரு சிறுநீரகத்தை விற்றது தெரியவந்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரிதா சர்கார், புகாரில் கூறியிருந்தார்.
ரிதா சர்கார், புகார் அளித்திருந்த நிலையில், கணவர் மற்றும் அவரது பெற்றோர், மைத்துனர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனை அறிந்த அவர்கள் அனைவரும் தலைமறைவாயினர். இந்த நிலையில், நேற்று முன்தினம் அவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது, கொலை முயற்சி, வரதட்சணை கொடுமை உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரிதா சர்காரிடம் இருந்து எடுக்கப்பட்ட சிறுநீரகம், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு பொருத்தப்பட்டுள்ளதாகவும் அது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் சிறுநீரக கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பிருக்கலாம் என்றும், கடத்தல் கும்பலைப்
பிடிக்க ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.