
மக்களவையில் குடியரசுத்தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் எழுந்து நின்று மேஜையை வேகமாக தட்டினார்.
மத்திய பட்ஜெட்டின் குறித்து நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அதற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது, 90 முறைக்கு மேல் மாநில அரசாங்கங்களை அகற்றி சட்டத்தை தவறாக பயன்படுத்திய காங்கிரஸ், ஜனநாயகம் குறித்து பேசுவது வேடிக்கையாக உள்ளது எனவும் மக்களுக்கான திட்டங்களை அறிவிப்பதிலும், அதை சரியான நேரத்தில் நிறைவேற்றதிலும் மத்திய அரசு சிறப்பாக செயல்படுகிறது எனவும் தெரிவித்தார்.
தமிழகம், கேரளா, ஆந்திர மாநிலங்களின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் கட்சி என்ன செய்தது என்றும் காங்கிரஸ் கட்சியின் அலட்சியத்தால், ஆந்திர மாநில எம்.பிக்கள் தனி அந்தஸ்து கோருகின்றனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
சாமானிய மக்களின் உணர்வுகளை எதிர்க்கட்சிகள் காயப்படுத்துகின்றன எனவும் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் நாட்டின் வளர்ச்சிக்கு என்ன செய்தார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சி செய்த பாவங்களுக்கு இப்போது அனுபவிக்கிறது எனவும் நாட்டை பிளவுப்படுத்தியது காங்கிரஸ் கட்சியே எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
உரையின் முடிவில் கேட்டுகொண்டிருந்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் எழுந்து நின்று மேஜையை வேகமாக தட்டினார்.