
குஜராத்தில் சிலர் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்து வருவதாக தீவிரவாத தடுப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சைபர் கிரைம் பிரிவு போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
குஜராத் மாநிலத்தை சிலர் பேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டர் உள்ளிட்ட வலைத்தளங்களில் மூலம் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்து வருவதாக அம்மாநிலத்தை சேர்ந்த தீவிரவாத தடுப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சைபர் கிரைம் பிரிவு போலீசார் உதவியுடன் சந்தேகத்துக்குரிய சில நபர்களின் இணையதள நடமாட்டத்தை அதிகாரிகள் மோப்பம் பிடித்தனர்.
அப்போது, சோடிலா உள்ளிட்ட சில வழிபாட்டுத் தலங்களின் மீது தாக்குதல் நடத்த வெளிநாடுகளில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள், சிலருக்கு திட்டம் தீட்டி தந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது.
அடுத்த இரண்டு நாட்களில் முக்கிய இடங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்களின் மீது தாக்குதல் நடத்த தேவையான வெடிகுண்டுகள் மற்றும் இதர பொருட்களை சேகரித்துவந்த சகோதரர்கள் இருவரின் செயல்பாடுகளை உறுதிசெய்த அதிகாரிகள் அசம்பாவித சம்பவங்கள் நடந்தேறுவதற்கு முன்னதாக குற்றவாளிகளை மடக்கிப் பிடிக்க தீர்மானித்தனர்.
இந்த சகோதரர்களில் ஒருவரான வசிம் ரமோடியா என்பவர் ராஜ்கோட் நகரிலும், நயீம் ரமோடியா என்பவர் பவாநகரிலும் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து இரு பிரிவுகளாக இயங்கி அவர்களை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில், தனித்தனியாக பிரிந்து சென்ற இரு தனிப்படை அதிகாரிகள் அவர்கள் இருவரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்கள் தங்கி இருந்த இடங்களில் வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருட்கள்.
கையெறி குண்டுகள், பேட்டரி, முகமூடிகள், சில முக்கிய குறிப்புகள் அடங்கிய கம்ப்யூட்டர்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
விரைவாக செயல்பட்டு தகுந்த வேளையில் கைது செய்ததால், தீவிரவாத தாக்குதலால் ஏற்படவிருந்த பெரும் அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கப்பட்டதாக குஜராத் மாநில தீவிரவாத தடுப்பு சிறப்புப் படை போலீஸ் துணை சூப்பிரண்ட் கே.கே. பட்டேல் குறிப்பிட்டுள்ளார்.