மாநில, தேசிய கட்சிகள் எப்படி அங்கீகரிக்கப்படுகின்றன? என்னென்ன தகுதிகள் வேண்டும்?

By Manikanda Prabu  |  First Published Feb 15, 2024, 4:53 PM IST

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மாநில, தேசிய கட்சிகள் எப்படி அங்கீகரிக்கப்படுகின்றன? சின்னங்கள் எப்படி ஒதுக்கப்படுகின்றன? என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், இந்தியாவில் அரசியல் கட்சிகள் எப்படி அங்கீகரிக்கப்படுகின்றன? மாநில, தேசிய கட்சிகள் எப்படி அங்கீகரிக்கப்படுகின்றன? அதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? சின்னங்கள் எப்படி ஒதுக்கீடு செய்யப்படுகின்றன? என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

அரசியல் கட்சிகள் எப்படி அங்கீகரிக்கப்படுகின்றன?

Tap to resize

Latest Videos


இந்திய தலைமை தேர்தல் ஆணையம்  ‘Election Symbols (Reservation and Allocation) Order 1968’ தேர்தல் சின்னங்கள்(ஒதுக்கீடு) 1968 ஆணையின் மூலம் அரசியல் கட்சிகளை அங்கீகரக்கின்றது. இதற்கு தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் விண்ணப்பிக்க வேண்டும். சட்டத்திற்குட்பட்டு, நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் கட்சிகள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படுகின்றன. அதன்படி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் இரண்டு வகைப்படும். ஒன்று தேசிய கட்சி, மற்றொன்று மாநில கட்சி.

தேசிய கட்சி என்றால் என்ன?


தேசிய கட்சி என்ற பெயரில் இருந்தே அதன் பொருளை விளங்கிக் கொள்ளலாம். மாநில அல்லது பிராந்திய கட்சிகள் குறிப்பிட்ட மாநிலத்தில் மட்டுமே அதன் செயல்பாடுகள் இருக்கும். அதுவே தேசிய கட்சி என்றால் தேசிய அளவில் அதன் செயல்பாடுகள் இருக்கும்.

தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்படுவதற்கு சில காரணிகளை பூர்த்தி செய்தால் போதும். காங்கிரஸ் மற்றும் பாஜக போன்ற இந்தியாவின் பெரிய கட்சிகள் தேசிய கட்சிகளாக இருக்கின்றன. கம்யூனிஸ்ட் உள்ளிட்ட வேறுபல கட்சிகளும் தேசிய கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அதற்காக அந்த கட்சிகள் தேசிய அளவில் செல்வாக்கு பெற்றவை என்று கருத வேண்டிய அவசியமில்லை.

Explained: தேர்தல் பத்திரம் என்றால் என்ன? ஏன் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது?

தமிழகத்தில் திமுக, ஒடிசாவில் பிஜேடி, ஆந்திராவில் ஒய்எஸ்ஆர்சிபி, பீகாரில் ஆர்ஜேடி, தெலங்கானாவில் டிஆர்எஸ் போன்ற கட்சிகள் அந்தந்த மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தினாலும், தேசிய அரசியலிலும் அந்த கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனாலும், அவை பிராந்தியக் கட்சிகளாகவே இருக்கின்றன.

ஒரு தேசிய கட்சி எப்படி வரையறுக்கப்படுகிறது?


ஒரு கட்சி தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்படுவதற்கான அளவுகோலை இந்திய தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது. இந்த நிபந்தனைகளை நிறைவேற்றுவதை பொறுத்து, ஒரு கட்சி தேசிய கட்சிக்கான அந்தஸ்தை பெறலாம் அல்லது இழக்கலாம். இந்த நிகழ்வுகள் மாறிக் கொண்டே இருக்கும். அதாவது அந்த நிபந்தனைகளை நிறைவேற்றாத பட்சத்தில் தேசிய கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். மீண்டும் அவை நிறைவேற்றப்பட்டால் தேசிய கட்சி அந்தஸ்து வழங்கப்படும்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் சின்னங்கள், 2019 கையேட்டின்படி; ஒரு கட்சியானது நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட வேண்டும் அல்லது சமீபத்திய மக்களவை அல்லது சட்டமன்றத் தேர்தல்களில் ஏதேனும் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் மொத்த செல்லுபடியாகும் வாக்குகளில் குறைந்தது 6 சதவீத வாக்குகளை கட்சியின் வேட்பாளர்கள் பெற்றிருக்க வேண்டும் அல்லது சமீபத்திய மக்களவைத் தேர்தலில் குறைந்தபட்சம் நான்கு எம்.பி.க்களை பெற்றிருக்க வேண்டும் அல்லது மக்களவை தொகுதிகளில் மூன்று மாநிலங்களுக்கு குறையாமல் மொத்த இடங்களில் குறைந்தபட்சம் 2 சதவீத இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட ஒரு கட்சிக்கு என்ன தேவை?


சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் குறைந்தபட்சம் 6% வாக்குகள் மற்றும் குறைந்தபட்சம் 2 எம்.எல்.ஏ.க்களை பெற்றிருக்க வேண்டும் அல்லது சமீபத்திய மக்களவை தேர்தலில் அந்த மாநிலத்தில் இருந்து 6% வாக்குகள் மற்றும் குறைந்தபட்சம் ஒரு எம்.பி.யை பெற்றிருக்க வேண்டும்.

சட்டமன்றத் தேர்தலில் மொத்த இடங்களின் எண்ணிக்கையில் குறைந்தது 3 சதவீதம் அல்லது மூன்று இடங்களை (எது அதிகமோ அதனை பெற்றிருக்க வேண்டும்) பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு 25 உறுப்பினர்களுக்கும் குறைந்தபட்சம் ஒரு எம்.பி. அல்லது மக்களவையில் குறிப்பிட்ட மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட விகிதாசாரப்படி பெற்றிருக்க வேண்டும். அல்லது சட்டமன்றத் தேர்தல் அல்லது மக்களவைத் தேர்தலில் மொத்த செல்லுபடியாகும் வாக்குகளில் குறைந்தது 8 சதவீத வாக்குகளை பெற்றிருக்க வேண்டும்.

மக்களவைத் தேர்தலில் களம் காணும் ஏழு மத்திய அமைச்சர்கள் யார்?

அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் எவ்வாறு  ஒதுக்கப்படுகிறது?


சுதந்திரத்திற்குப்பின் அதிகம் படிக்காத மக்கள்தொகை கொண்ட நாடாக இருந்த இந்தியாவில், எளிய முறையில் மக்களிடம் சென்றடையும் நோக்கத்தில் கட்சிகளுக்கு சின்னங்கள் வழங்கப்பட்டன. சின்னங்கள் வழங்கப்படுவதற்கு முன்பு, பல வண்ணங்கள் கொண்ட ஓட்டு பெட்டிகள் தான் ஒதுக்கப்பட்டிருந்தன. வாக்காளர் ஓட்டுச் சீட்டை எந்த வண்ண பெட்டியில் போடுகிறாரோ, அதுவே, அவர் வாக்களித்த கட்சியாக கருதப்பட்டது.

இந்த முறையில் மாற்றம் கொண்டு வந்தவர் சுகுமார் சென். 1950ஆம் ஆண்டில் இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்ற அவர், மற்ற நாடுகளில் தேர்தல் நடப்பை ஆராய்ந்து, கட்சிகளின் சின்னங்களை உள்ளடக்கிய வாக்குச் சீட்டு முறையை கொண்டு வந்தார். அதன்பின்னரே சின்னங்கள் நடைமுறைக்கு வந்து அவை அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டன.

இந்திய தேர்தல் சின்னங்களுக்கும் அதைக்கொண்டிருக்கும் கட்சிகளின் கொள்கைகளுக்கும் எள்ளளவும் சம்பந்தம் இருக்க வேண்டியதில்லை. காரணம், இச்சின்னங்கள் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அவர்களிடம் இருக்கும் முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட சின்னங்களின் பட்டியலிலிருந்து வழங்கப்படுகின்றன. இந்தப்பட்டியலில் அன்றாடம் நம் வாழ்க்கைக்கு தொடர்புள்ள ஆயிரக்கணக்கான சின்னங்கள் இடம்பெற்றுள்ளன. தேர்தல் ஆணையத்தின் சின்னங்களின் பட்டியலில் உள்ள பெரும்பாலானவை எம்.எஸ்.சேதி என்பவரால் வடிவமைக்கப்பட்டது.

தேர்தல் ஆணையம் ஒருவருக்கு அளிக்கப்பட சின்னங்களை மற்றொருவருக்கு அதே தேர்தலில் அளிப்பதில்லை. அடுத்த தேர்தலில் சின்னங்கள் மாற வாய்ப்புள்ளது. ஒரு குறிப்பிட்ட அளவிற்கு வாக்குவங்கி உள்ள கட்சிகளுக்கு ஒரே சின்னம் தொடர்ந்து வழங்கப்படுகிறது. இந்தியாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே சின்னத்தை பயன்படுத்தி வரும் கட்சி என்றால் அது திமுகதான். 

ஒரு கட்சி பிளவுபெற்றால், பழைய சின்னம் பிளந்து சென்ற அமைப்பிற்கு வழங்கப்படுவதில்லை. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் பெரும்பாலானோர் கொண்ட பிரிவு உரிமை கோர வேண்டும். அதனை ஆராய்ந்து தேர்தல் ஆணையம் சின்னத்தை குறிப்பிட்ட பிரிவுக்கு ஒதுக்குகிறது.

மேற்கண்ட  வரன்முறைகளின்படி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு நிரந்தர சின்னம் ஒதுக்கப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் தங்களின் கொள்கையை உணர்த்தும் வகையிலோ அல்லது மக்களை கவரும் வகையிலோ சின்னங்களை உருவாக்கி ஆணையத்தில் அனுமதி பெறுகின்றன.

தேசியக் கட்சி என்றால் அந்த சின்னம் நாடு முழுவதுக்கும் பொதுவானது. பிற கட்சிகளால் பயன்படுத்த முடியாது. மாநிலக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் சின்னத்தை பிற மாநிலக் கட்சிகளுக்கும் ஒதுக்கலாம்.

ஆனால், அங்கீகாரம் பெறாத கட்சிகளுக்கு நிரந்தர சின்னம் ஒதுக்கப்படுவதில்லை. அப்படி இருக்கும்பட்சத்தில், தேர்தல் ஆணையத்திடம் உள்ள இலவச சின்னங்களின் பட்டியலில், பத்து சின்னங்களின் பெயர்களை, விருப்பத்தின் அடிப்படையில் கொடுக்கலாம். மேலும், ஒரு கட்சி, தங்களுக்கு விருப்பமான மூன்று புதிய சின்னங்களை, பெயர்கள் மற்றும் தெளிவான வடிவமைப்பு மற்றும் சின்னத்தின் வரைபடங்களுடன் அளிக்கலாம். அத்தகைய சின்னத்தை ஒதுக்குவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை எனில், அதனை தேர்தல் ஆணையம் வழங்கும்.  அங்கீகாரம்  இல்லாத கட்சிகளுக்கு அந்த தேர்தலில் ஒரே சின்னத்தை பொதுவாக ஒதுக்குவதும் தேர்தல்  ஆணையத்தின் கைகளிலேயே உள்ளது.

click me!