Explained: எல்லைக்குள் வரும் எதிரிகளின் ட்ரோன்களை ராணுவத்தின் கரும்பருந்துகள் எவ்வாறு அழிக்கின்றன?

By Dhanalakshmi GFirst Published Dec 3, 2022, 2:25 PM IST
Highlights

இந்திய பாகிஸ்தான் எல்லை என்றுமே பதற்றமாகவே இருந்து வருகிறது. இத்துடன் கடந்த சில ஆண்டுகளாக சீன, இந்திய எல்லையும் சேர்ந்துவிட்டது. 

சமீப காலங்களில் இந்திய எல்லைக்குள் ட்ரோன்கள் வருவது அதிகரித்து வருகிறது. இந்த ட்ரோன்கள் இந்திய எல்லைக்குள் உளவு பார்ப்பதற்காக எதிரி நாடுகளால் அனுப்பப்படுகிறது என்ற சந்தேகம் எழுந்து வருகிறது. அந்த வகையில் சந்தேகத்துக்கு உரிய வகையில் இந்திய எல்லைக்குள் நுழையும் ட்ரோன்களை குறிவைத்து அழிக்க கரும்பருந்து பறவைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த வகைப் பறவைகள் இந்திய, அமெரிக்க போர் பயிற்சிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சியின்போது ட்ரோன்களை அர்ஜூன் என்று பெயரிடப்பட்ட கரும்பருந்து தாக்கி அழிக்கும் செயல் செய்து காண்பிக்கப்பட்டது.  

கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து கரும்பருந்திற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சி முடிந்த பிறகு எப்போது ராணுவத்தில் கரும்பருந்து சேர்க்கப்படும் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கரும்பருந்தின் தலை மீது சிறிய கேமராவை பொருத்தி விடுவார்கள். இது பறந்து செல்லும்போது, விண்வெளியில் நடக்கும் சம்பவங்கள், எல்லையில் நடக்கும் சம்பவங்கள் மற்றும் எதிரிகளின் ட்ரோன்களை படம் பிடித்து விடும் என்று தெரிவித்துள்ளனர். இந்தப் கரும்பருந்துகள் நவீன ராணுவ வீரர்களைப் போலவே செயல்படும்.

ஜிபிஎஸ், கேமிராவுடன் கரும்பருந்துகள், நாய்களுக்கு ராணுவம் பயிற்சி: எல்லைப் பாதுகாப்புக்கு புதிய உத்தி!

ட்ரோனில் போதைப்பொருள்:
கடந்த செவ்வாய் கிழமை பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதிக்குள் 3 கிலோ போதைப் பொருள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை இந்திய எல்லை பாதுகாப்புப் படையினர் குறிவைத்து தாக்கி அழித்தனர். இதுபோன்று எதிர்கொண்டு இருக்கும் நாட்களில் எல்லைப் பகுதியில் குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் பகுதிக்குள் வரும் ட்ரோன்கள் கண்காணிக்கப்படும் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கரும்பருந்து தந்திரம்:
இந்திய, அமெரிக்க ராணுவ பயிற்சியில், ஒரு நாய் மற்றும் கரும்பருந்து உதவியுடன் ஆளில்லா ட்ரோனை கண்டுபிடித்து அழிக்கக்கூடிய ஒரு காட்சியை இந்திய ராணுவம் செய்து காட்டியது. ட்ரோன்களின் துல்லியமான இடத்தைக் கண்டறிய கரும்பருந்து பறக்கவிடப்பட்டது. அதேசமயம், ட்ரோனின் சத்தத்தைக் கேட்டவுடன், நாய் இந்திய ராணுவத்திற்கு எச்சரிக்கை கொடுக்கிறது. இது நிகழும்போது, ​​கரும்பருந்து எதிரி ட்ரோனின் இருப்பிடத்தை துல்லியமாக தீர்மானித்து, ட்ரோனை சுற்றி வளைக்கிறது. தனது காலில் இருக்கும் பிளேடு போன்ற நகத்தால், ட்ரோனின் பிளேடுகளை சேதப்படுத்துகிறது. 

பறவைக்கு ஏன் பயிற்சி?
கரும்பருந்து மற்றும்  நாய்க்கு பயிற்சி அளிப்பது பஞ்சாப் மற்றும் ஜம்மு-காஷ்மீருக்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்த மாநிலங்களுக்கு பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் மூலம் சட்டவிரோத பொருட்கள், துப்பாக்கிகள் மற்றும் பணத்தை அனுப்பியதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில்தான் ஆளில்லா விமானங்களை குறிவைத்து அழிக்க கரும்பருந்துகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

எவ்வாறு பயிற்சி அளிக்கபடுகிறது?
இந்த முயற்சி புதியது அல்ல. 2016 ஆம் ஆண்டு முதல் ட்ரோன்களை வீழ்த்துவதற்கு கழுகுகளை பயன்படுத்துவதாக டச்சு போலீசார் தெரிவிக்கின்றனர். லேப்மேட் ஆன்லைன் அறிக்கையின்படி, டச்சு போலீசார், இரை பயிற்சி குழு காவலர்களுடன் இணைந்து, பறந்து வரும் ட்ரோன்களை உணவுப் பொருளாக பாவித்து கரும்பருந்துகளுக்கு பயிற்சி அளிக்கின்றனர். அவ்வாறு பறந்து வரும் ட்ரோன்களின் பிளேடுகளை தனது காலில் இருக்கும் கூரிய நகங்களால் தாக்கி அழிக்கின்றன கரும்பருந்துகள்.

எங்கு பயிற்சி?
மீரட்டில் உள்ள ரீமவுண்ட் வெட்டர்னரி கார்ப்ஸ் (ஆர்விசி) மையம் கரும்பருந்துகள் மற்றும் வல்லூறுகளுக்கு ரகசியமாக பயிற்சி அளித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக, ஸ்மார்ட் போன் பயன்படுத்தப்படுகிறது. 'குவாட்காப்டர்' என்ற ஒரு வகை ஹெலிகாப்டர் தான் தற்போது அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு நான்கு பிளேடுகள் இருக்கும். சிறிய ஆளில்லா ட்ரோன்கள் என்றும் அழைக்கப்படுகிறது. பயிற்சியில் சில நூறு டிரோன்களை முழுவதுமாக கரும்பருந்துகள் அழித்துள்ளன. ஆனால், அவற்றுக்கு சிறிய காயம் கூட ஏற்படவில்லை என்று பயிற்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது எதிரிகளால் பயன்படுத்தப்படும் ட்ரோன்கள் அளவில் பெரியதாக இருப்பதால், அதற்குத் தகுந்தவாறு கரும்பருந்துகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. கரும்பருந்துகளின் தலையில் வீடியோ எடுப்பதற்கு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. இதனால் வானில் இருந்தாவாறு அவற்றால் வீடியோ பதிவுகளையும் கொண்டு வரமுடியும். வரலாற்றில் தகவல்கள் கொண்டு செல்வதற்கு புறாக்கள் பயன்படுத்தப்பட்டன என்று கூறப்பட்டது. அது சாத்தியம் என்றால், இதுவும் சாத்தியம்தான். 

பருந்துகளுக்கு நல்ல பார்வை திறன் இருக்கிறது. பொதுவாக 5 கி. மீட்டர் தொலைவில் இருக்கும் பொருட்களை எளிதில் அடையாளம் கண்டுவிடும். மழை பெய்தால் மற்ற பறவைகள்தான் ஒதுங்கும். ஆனால், மழை மேகங்களுக்கு மேலே பறந்து மழையில் இருந்து தப்பிக்கும் திறன் படைத்தது பருந்து. அதனால்தான் பருந்துகளை ராணுவம் தேர்வு செய்து இருக்கலாம். 

click me!