ஒடிசா மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பூரி ஜகந்நாதர் கோயில் கருவறையில் எலிகள் அதிக அளவில் புகுந்து அலங்கோலம் செய்துவருவதாக பூசகர்கள் புகார் கூறியுள்ளனர்.
ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி ஜகந்நாகர் கோயில் உலக அளவில் புகழ்பெற்ற திருத்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்குள்ள ஜகந்நாதர், பாலபத்ரர், சுபத்திரை ஆகியோரின் தரிசனத்துக்காக நாட்டில் பல மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் வருகிறார்கள்.
இந்நிலையில், இந்தக் கோயிலில் கூட்டம் கூட்டமாக எலிகள் சுற்றித் திரிகின்றன எனவும் அவை கருவறைகளுக்குள் புகுந்து நாசம் செவதாக பூசகர்கள் புகார் சொல்கிறார்கள். எலிப்படை கருவறையில் உள்ள கடவுளர்களுக்கு அணிவிக்கும் மாலை, அணிகலன் உள்ளிட்டவற்றைக் கொறித்து அலங்கோலம் ஆக்குகின்றன என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
பூஜை செய்யும் கருவறைக்குள் எலிக்கூட்டம் திடீரென அங்கும் இங்கும் ஓடி ஆட்டம் போடுவதால் பூஜைகளைச் சரிவரச் செய்யமுடியாமல் தொந்தரவாக உள்ளது எனவும் அவர்கள் முறையிடுகிறார்கள்.
“அவை கருவறை மூலைகளில் உள்ள பொந்துகளில் குடியிருக்கின்றன. கருவறைக்குள் அவை அசிங்கம் செய்துவைக்கின்றன. அவை விட்டுச்சென்ற கழிவுகளுக்கு மத்தியில் நின்று பூசை செய்யவேண்டியதாக இருக்கிறது” என சத்திய நாராயணன் புஷ்பலக் என்ற பூசகர் கூறுகிறார்.
“தரையில் பதிக்கப்பட்டுள்ள கற்களுக்கு இடையில் சிறிய துளைகள் இருக்கின்றன. அவற்றிலிருந்து வரும் எலிகள்தான் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன” என்று மற்றொரு பூசகர் சொல்கிறார்.
2020, 2021ஆம் ஆண்டுகளில் கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தபோது சில மாதங்கள் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. அப்போது கோயிலில் தொல்லை கொடுத்துவந்த எலிககளும் கரப்பான் பூச்சிககளும் கொல்லப்பட்டன.
இதுபற்றி கோயில் நிர்வாகிகளில் ஒருவரான ஜிதேந்திர சாஹூ கூறுகையில், “இந்த பிரச்சினைக்கு தற்காலிகத் தீர்வாக எலிகளைப் பிடிக்க பொறிகளை வைத்திருக்கிறோம். சிக்கும் எலிகளை வெளியே கொண்டுசென்று விடுகிறோம். எலி மருந்து வைத்து அவற்றை கொல்ல முயற்சி எடுக்கவில்லை” என்று குறிப்பிடுகிறார்.
Makara Jyothi: சபரிமலையில் மகரஜோதி தரிசனம்.. ஐயப்ப பக்தர்கள் பரவசம்