
மணிப்பூரில் கடந்த மாதம் இரு பிரிவுகளைச் சேர்ந்த மக்களிடையே மோதல் ஏற்பட்டதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது.
கடந்த மே மாதம் 3ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவரும் வன்முறைச் சம்பவங்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் மாநிலத்தில் இருந்து வெளியேறியுள்ளனர். இச்சூழலில் மணிப்பூர் நிலவரம் குறித்து நாட்டின் பிரதமராக இருக்கும் மோடி இன்றுவரை ஒரு வார்த்தைகூட கூறவில்லை.
அதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், அண்மையில் ஒலிபரப்பான அவரது மன் கீ பாத் வானொலி உரையைப் புறக்கணித்த மணிப்பூர் மக்கள் பிரதமர் பேசத் தொடங்கியதும் ரேடியோ பெட்டிகளை உடைத்தும் எரித்தும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மணிப்பூரில் நிலவும் சூழ்நிலை குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துமாறு காங்கிரஸ் கட்சி கோரியது.
அதன் எதிரொலியாக உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 24ஆம் தேதி தலைநகர் டெல்லியில் மணிப்பூர் நிலவரம் குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்கும் என்று தெரிவித்தார். அதன்படி இன்று (சனிக்கிழமை) தலைநகர் டெல்லியில் உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கி நடக்கிறது.
அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. ஜான் பிரிட்டாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். திமுக சார்பில் எம்.பி. திருச்சி சிவா கலந்துகொண்டிருக்கிறார். அதிமுக சார்பில் எம்.பி. தம்பிதுரை பங்கேற்றுள்ளனர்.
ஆனால், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று கூறிய காங்கிரஸ் கட்சி இதனைப் புறக்கணித்துள்ளது. பிரதமர் கலந்துகொள்ளாதுதான் காரணம் என்றும் கூறியிருக்கிறது.
மக்களே உஷார்.! இரவில் ஏசி, ஏர் கூலர்களை பயன்படுத்துகிறீர்களா.? மின் கட்டணம் தாறுமாறாக உயர்கிறது