Schools leave in delhi : அதிகரிக்கும் காற்றுமாசு… டெல்லியில் நாளை முதல் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை!!

By Narendran SFirst Published Dec 2, 2021, 4:57 PM IST
Highlights

காற்று மாசு அதிகரித்துள்ளதன் காரணமாக டெல்லியில் நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை மீண்டும் பள்ளிகள் மூடப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதன் காரணமாக டெல்லியில் நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை மீண்டும் பள்ளிகள் மூடப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. காற்று மாசு மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. இந்த நிலையில் மனிதர்கள் சுவாசிப்பதற்கு தகுதியானது அல்ல என்ற அளவிற்கு காற்றின் தரம் தற்போது காணப்படுகிறது. இங்கு பல்வேறு இடங்களில் காற்றின் தரக்குறியீடு 400யை தாண்டியுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் காற்று மாசின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. பனிக்காலங்களில் காற்றில் மாசுத் துகள்கள் தங்கிவிடுவதால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்குள்ளாகின்றனர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடித்தன் மூலம் டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரித்துள்ளது. இதனால் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காற்று மாசை குறைக்க தண்ணீரை தெளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும்காற்று மாசைக் கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதனைச் சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து டெல்லியில் முழு ஊரடங்கை டெல்லி அரசு அமல்படுத்தியது. அரசு ஊழியர்கள் அனைவரும் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டனர். தனியார் நிறுவனங்களும் இதே மாதிரியான நடைமுறையைப் பின்பற்றுமாறு அரசு கேட்டுக்கொண்டது. அதேபோல கட்டுமான தொழில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. அதேபோல அத்தியாவசிய வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி. மற்ற வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி அனைத்து கல்வி நிறுவனங்களும் கால வரையின்றி மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் வழியாகவே வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மறு உத்தரவு வரும் வரை நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாகவும் சில நாட்களுக்கு முன் அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் அரசின் நடவடிக்கைகளால் டெல்லியில் காற்று மாசு குறைந்ததை அடுத்து நவம்பர் 29 ஆம் தேதி முதல், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. அதேசமயம் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வீடுகளிலிருந்து பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.  

இந்நிலையில் காற்றின் மாசு அதிகமாக உள்ள நிலையில் டெல்லியில் பள்ளிகளைத் திறந்தது ஏன்? என டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று கேள்வி எழுப்பியது. மேலும் வேலைக்கு செல்பவர்கள் வீட்டிலேயே இருந்து பணியாற்றுமாறு தெரிவித்துவிட்டு, மாணவர்களை பள்ளிக்கு வருமாறு கட்டாயப்படுத்தியது ஏன்? என சரமாரியாக கேள்வி எழுப்பப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அம்மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் கூறுகையில், காற்றின் தரம் மேம்படும் என்ற முன்னறிவிப்பை கருத்தில் கொண்டு நாங்கள் பள்ளிகளை மீண்டும் திறந்தோம். இருப்பினும், காற்று மாசு அளவு மீண்டும் அதிகரித்துள்ளதால், நாளை முதல் அடுத்த உத்தரவு வரும் வரை பள்ளிகளை மூட முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.

click me!