அன்று கலவரம், இன்று கொண்டாட்டம்... ரம்ஜான் தினத்தில் மத நல்லிணக்கம் - அசத்திய டெல்லி மக்கள்..!

Published : May 03, 2022, 02:13 PM IST
அன்று கலவரம், இன்று கொண்டாட்டம்... ரம்ஜான் தினத்தில் மத நல்லிணக்கம் - அசத்திய டெல்லி மக்கள்..!

சுருக்கம்

அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த போலீசாருக்கும் அங்குள்ளவர்கள் இனிப்புகளை வழங்கி தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.   

டெல்லியின் ஜஹாங்கீர்புரி பகுதியில் வசிக்கும் இந்து மற்றும் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர்கள் ஒன்றாக இணைந்து ரம்ஜான் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். வேறு மதங்களை சேர்ந்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் இனிப்புகளை பரிமாறி, கட்டியணைத்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

கடந்த மாதம் இதே பகுதியில் மத கலவரம் வெடித்த நிலையில், இன்று மத நல்லிணக்கத்தோடு அமைதி மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் இன்றைய ரம்ஜான் கொண்டாட்டம் அமைந்தது. இதுதவிர அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த போலீசாருக்கும் அங்குள்ளவர்கள் இனிப்புகளை வழங்கி தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். 

நல்லிணக்கம்:

"ஜஹாங்கீர்புரி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கடந்த மாதம் நிலைமை மிகவும் மோசமானதாக இருந்தது. இன்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, குஷல் சௌக் பகுதியில் ஒன்று கூடினோம். இனிப்புகளை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டு, கட்டி அணைத்து அமைதி மற்றும் நல்லிணக்கம் ஓங்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டோம். இது ஜஹாங்கீர்புரி மக்கள் நல்லிணக்கத்தோடு, அனைத்து மதங்களும் மரியாதை அளிக்கின்றனர் என்பதை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்து இருக்கிறது," என முஸ்லீம் மதத்தை சேர்ந்த டப்ரெஸ் கான் தெரிவித்தார். 

"இங்கு நிலைமை மாறி வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் இயல்பு நிலை திரும்பி கொண்டிருக்கிறது. வரும் நாட்களில் இது மேலும் அதிகமாகும் என நம்புகிறோம்," என அவர் மேலும் தெரிவித்தார். 

தீவிர பாதுகாப்பு:

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இந்த பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருக்கிறோம் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

"மாவட்டம் முழுக்க தேவையான பாதுகாப்பு மற்றும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறோம். இந்த பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட அமான் கமிட்டி சந்திப்புகள் வழக்கம் போல் நடத்தப்பட்டன," என்று வடமேற்கு பகுதிக்கான துணை ஆணையர் உஷா ரங்னானி தெரிவித்தார்.

மகிழ்ச்சி:

இதோடு குஷல் சௌக் பகுதியில் மசூதி அமைந்து இருக்கும் பிளாக் சி பிரதான சாலையில் உள்ள கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு வழக்கம் போல் பண்டிகை கால வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்து மதத்தை சேர்ந்தவரும், அங்குள்ள குடியிருப்பு நல சங்க அமைப்பின் தலைவருமான இந்திராமணி திவாரி, "இங்கு ரம்ஜான் அமைதியான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் அமைதி நிலவுகிறது. விரைவில் இந்த பகுதி இயல்பு நிலைக்கு திரும்பும்," என தெரிவித்தார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வீர் சாவர்க்கர் பெயரில் சர்வதேச விருது.. ஏற்க மறுத்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்!
பிரதமர் மோடி இதயங்களை ஹேக் செய்பவர்! மக்களவையில் தாறுமாறாக புகழ்ந்த கங்கனா ரணாவத்!