இமாச்சலப் பிரதேச கனமழையில் பலியான 24 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது
நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வட மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், ஹரியாணா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், டெல்லி ஆகிய வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்ததில் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
கனமழை காரணமாக மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பாலங்கள் சிதைந்துள்ளன. வீடுகல் தரைமட்டமாகியுள்ளன. மணாலி பகுதியில் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஆங்காங்கே முடங்கியுள்ளனர். அம்மாநிலத்தின் பியாஸில் ஏற்பட்ட வெள்ளம் பெரிய அளவிலான பேரழிவை ஏற்படுத்திய நான்கு நாட்களுக்குப் பிறகு குலு மற்றும் மணாலியில் இருந்து வாகனங்களுக்கு அடியில் சிக்கிய உடல்களின் புகைப்படங்கள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியது.
குலு மாவட்டத்தில் உள்ள பியாஸ் மற்றும் பர்பதி ஆற்றில் கார்கள், லாரிகள், பேருந்துகள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் அடித்து செல்லப்படும் காட்சிகள் வெளியாகின. தொடர் கனமழைக்கு இடையே மீட்பு பணிகளையும் அம்மாநில அரசு துரிதப்படுத்தியுள்ளது. தேசியப் பேரிடர் மீட்பு படையினர் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இமாச்சலப் பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் 24 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தின் குலுவில் நிலவரம் குறித்துப் பேசிய காவல்துறை கண்காணிப்பாளர் சாக்ஷி வர்மா, ஜூலை 15 அன்று மொத்தம் 24 சடலங்கள் மீட்கப்பட்டதாகக் கூறினார்.
குலுவில் பல்வேறு இடங்களைச் சேர்ந்த 208 வெளிநாட்டினர் மீட்கப்பட்டுள்ளனர் மற்றும் குறைந்த இணைப்பு உள்ள இடங்களில் சிறப்புக் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 16 இறந்த உடல்களை நாங்கள் மீட்டோம், ஸ்ரீகண்ட் மகாதேவ் யாத்திரை சென்ற எட்டு உடல்கள் மீட்கப்பட்டன. மொத்தம் 24 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. குலுவில் பல்வேறு இடங்களில் இருந்து 208 வெளிநாட்டினரை மீட்டுள்ளோம். குறைவான இணைப்பு உள்ள இடங்களில் எங்கள் சிறப்புக் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன” என்று சாக்ஷி வர்மா தெரிவித்துள்ளார்.
இமாச்சலப் பிரதேசத்தில் ஜூன் 24 முதல் ஜூலை 14 வரை பெய்த கனமழையில் சிக்கி 108 பேர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவு, மேக வெடிப்பு மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக 36 பேர் உயிரிழந்துள்ளனர். சாலை விபத்து, நீரில் மூழ்குதல், செங்குத்தான பாறையில் இருந்து விழுதல், பாம்பு கடி, மின்கசிவு போன்ற காரணங்களால் 72 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசு அதிகாரிகள் வட்டாரத் தகவலகள் தெரிவிக்கின்றன.