கேரளாவில் பெய்து வரும் கனமழையால் கொச்சி மற்றும் திருவனந்தபுரம் ஆகியவை வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன
அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. திருவனந்தபுரம், கொச்சி, ஆழப்புழா, கொல்லம், எர்ணாகுளம் என பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்றும் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கொச்சி மற்றும் திருவனந்தபுரம் மிக மோசமான நிலையில் அதன் தாழ்வான பகுதிகள் முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இந்த நகரங்களில் வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் வசிப்பவர்கள் தீயணைப்பு, மீட்பு படையினர் மற்றும் உள்ளூர் தன்னார்வலர்களால் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். கனமழை காரணமாக, மரங்கள் வேராடு சாய்ந்து விழுந்துள்ளன. சாலைகளில் ஓடும் வெள்ள நீர் வாகனங்களை அடித்துச் செல்கின்றன. மின்கசிவு அபாயங்களைத் தவிர்ப்பதற்காக பிரதான ஃபீடர் லைன்களை கேரளா மாநில மின்சார வாரியம் துண்டித்துள்ளது. இதனால், பல்வேறு இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்: சோதனைக் கட்டத்தை தாண்டுமா இந்தியா கூட்டணி?
மேலும், தென் தமிழகத்தின் புயல் சுழற்ச்சி காரணமாக கேரளா முழுவதும் வருகிற 18ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், கரையோரங்களில் வசிப்பவர்கள், தாழ்வான இடங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.