
Heavy rain in Bengaluru: இந்தியா முழுவதும் கடந்த 2 மாதங்களாக வெயில் கடுமையாக வாட்டிய நிலையில், குளுமையான காலநிலைக்கு பெயர் பெற்ற பெங்களூருவிலும் வழக்கத்துக்கு மாறாக 35 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது. ஆனால் கடந்த சில நாட்களாக பெங்களூருவில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில், பெங்களூருவில் நேற்று இரவு முதல் காலை வரை விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது.
பெங்களூருவில் கொட்டிய கனமழை
இதனால் நகரின் பல பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, தண்ணீர் குளம்போல் தேங்கியுள்ளது. பெங்களூருவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள முக்கிய பகுதிகளிலும், குறிப்பாக ஐடி பூங்காக்கள் மற்றும் கார்ப்பரேட் மையங்கள் அமைந்துள்ள பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் சிறு பாலங்கள் நீரில் மூழ்கின. அடிக்கடி மழையின் தாக்கத்தைத் தாங்கும் பிரபலமான பாணத்தூர் சாலை கீழ்ப்பாலம் நீரில் மூழ்கியது.
பெங்களூருவில் கடும் போக்குவரத்து நெரிசல்
பெங்களூரின் ஏற்கனவே அதிக பிஸியான IT வழித்தடமான அவுட்டர் ரிங் ரோடு, முக்கிய சாக் பாயிண்டுகளிலும் பரவலாக தண்ணீர் தேங்கியது. பொதுவாகவே பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். நேற்று விடிய விடிய கொட்டிய மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியதன் காரணமாக இன்று காலை மிகப்பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடும் போக்குவரத்து நெரிசலால் வேலைக்கு செல்பவர்கள் உள்ளிட்ட அனைவரும் கடும் அவதி அடைந்தனர்.
வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை
பெங்களூருவின் ஐயப்பன் கோயிலுக்கு அருகிலுள்ள புதிய BEL சாலை, சராய்பால்யா நோக்கிச் செல்லும் நாகவரா பேருந்து நிறுத்தம், அல்லாசந்திராவிலிருந்து யெலஹங்கா வட்ட வழித்தடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியதால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்லும்படி போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
மே மாதத்தில் இதுவரை இல்லாத மழைப்பொழிவு
பெங்களூருவில் மே மாதத்தில் இதுவரை இல்லத அளவு மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. பெங்களூரு நகர்ப்புற மண்டலம் ஒரே இரவில் 132 மிமீ மழையைப் பதிவு செய்தது. அதே நேரத்தில் பெங்களூரு வடக்குப் பகுதியின் சோமசெட்டிஹள்ளியில் உள்ள ஆய்வகம் 119 மிமீ மழையைப் பதிவு செய்துள்ளது. இது நகரத்தின் வானிலை முறைகளின் அதிகரித்து வரும் கணிக்க முடியாத தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.