குதறிப்போடப்பட்ட குடகு மாவட்டம்… வெளுத்து வாங்கும் கனமழை… வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 7 பேர் உயிரிழப்பு !!

By Selvanayagam PFirst Published Aug 18, 2018, 7:57 AM IST
Highlights

தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாக கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் குடகு மாவட்டம் தீவு போல காட்சியளிக்கிறது. வெள்ளம் சூழ்ந்த பகுதியில் சிக்கியுள்ள மக்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். விடாமல் அடித்து ஊற்றி வரும் பலத்த மழையால் 7 பேர் உயிரிழந்துள்ளனர்

கர்நாடக-கேரளா எல்லையில் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் குடகு மாவட்டம் அமைந்துள்ளது. மலைநாடு மாவட்டங்களில் குடகும் ஒன்று. இந்த மாவட்டத்தின் பாகமண்டலா தலைக்காவிரி என்ற இடத்தில் தான் காவிரி நதி உற்பத்தி ஆகிறது.

அதுபோல் ஏராளமான சுற்றுலா தலங்களையும் குடகு மாவட்டம் தன்னகத்தே கொண்டுள்ளது. கர்நாடகத்தில் கடந்த மே மாதம் இறுதியில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை குடகு மாவட்டத்தையும் விட்டுவைக்கவில்லை. அவ்வப்போது கொட்டி தீர்த்து வந்த கனமழை கடந்த ஒருவாரமாக இடைவிடாது ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.



குறிப்பாக மடிகேரி, விராஜ்பேட்டை, சோமவார்பேட்டை ஆகிய 3 வட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் மழை வெள்ளம் சாலைகளில் கரைபுரண்டு ஓடி வருகிறது. தொடர் மழையால் மடிகேரி-மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து மண்சரிவு ஏற்பட்டு வருகிறது.


இதுதவிர மடிகேரி-சம்பாஜே ரோடு, மடிகேரி-மாதாபுரா ரோடு, குசால்நகர்-ஹாசன் ரோடு உள்பட மாவட்டம் முழுவதும் முக்கியமான பல சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.. அத்துடன் தொடர் மழையால் சில தரைமட்ட பாலங்கள், சிறிய பாலங்களையும் தண்ணீர் மூழ்கடித்து செல்கின்றன.

தொடர்ந்து கொட்டி தீர்த்துவரும் கனமழையால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருகரைகளையும் தாண்டி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பாகமண்டலா பகுதியில் காவிரி ஆற்றங்கரையையொட்டிய பகுதி முழுவதும் வெள்ள நீர் புகுந்து ஆர்ப்பரித்து செல்கிறது. அதுபோல் பாகமண்டலா, கரடிகோடு, கூடிகே, குய்யா, நாபொக்லு, பேத்ரி, பூக்கோலா உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

இந்த நிலையில் மக்கந்தூர் அருகே தொட்டகுண்டு பெட்டா பகுதியில் மலையில் மண்சரிவு ஏற்பட்டு வீடுகள் மீது விழுந்தன. மேலும் மழை நீரும் மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால் அங்கு வசித்து வந்த 200-க்கும் மேற்பட்ட மக்கள் அருகில் இருந்த மேடான பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

தற்போது குடகில் தொடர்ந்து காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மேலும் பனிப்பொழிவும் அதிகமாக இருக்கிறது. இதனால் ஹெலிகாப்டர் மூலம் மக்களை மீட்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 இதற்கிடையே குடகில் உள்ள ஹாரங்கி அணையில் இருந்து நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 33,549 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அத்துடன் மழை நீரும் பெருக்கெடுத்து செல்வதால், ஹாரங்கி அணை கால்வாய்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. அந்த கால்வாய்களை ஒட்டிய 25-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

தொடர் மழையால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, வெள்ள நீர் சூழ்ந்த நிலையில் குடகு மாவட்டம் குட்டி தீவுப்போல் காட்சி அளிக்கிறது. மாவட்டம் முழுவதும் கனமழைக்கு 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன. ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய நிலங்களில் மழை நீர் புகுந்து நாசமாகி உள்ளன.

click me!