அடி மேல் அடி விழும் மலையாள தேசம்… இன்று கனமழையோடு பலத்த காற்றும் வீசும் என எச்சரிக்கை… அச்சத்தில் கேரள மக்கள் !!

By Selvanayagam PFirst Published Aug 18, 2018, 7:04 AM IST
Highlights

கேரள மாநிலத்தில் இன்று மிக கனமழை பெய்யும் என்றும் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கர காற்று வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் அச்சத்தின் பிடியில் சிக்கியுள்ளனர்

கேரளாவில் கடந்த மே மாதம் 29-ந் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை கடந்த 8-ந் தேதி முதல் தீவிரமடைந்தது. அங்குள்ள 14 மாவட்டங்களிலும் இடைவிடாது பெய்து வரும் மழையால் மாநிலம் முழுவதும் வெள்ளநீரில் மிதக்கிறது. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்வதால், மாநிலத்தின் 39 அணைகளும் நிரம்பி உள்ளன.

இதில் 35 அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்படுகிறது. இது தாழ்வான பகுதிகளை சூழ்ந்து வெள்ளக்காடாக்கி இருக்கிறது. இதனால் மொத்த மாநிலமும் பெருங்கடலுக்குள் சிக்கியிருப்பது போன்ற சூழல் ஏற்பட்டு உள்ளது. இதைப்போல இடுக்கி, வயநாடு, மலப்புரம் போன்ற மலைப்பாங்கான மாவட்டங்களில் தொடர்ந்து ஏற்படும் நிலச்சரிவால், எங்கு பார்த்தாலும் சேறும் சகதியுமாகவே காணப்படுகிறது. 

கொச்சி விமான நிலையத்தில் தேங்கியுள்ள வெள்ளம் வடியாததால், 26-ந் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக இன்று வரையே விமானநிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.கேரளாவில் கோரத்தாண்டவம் ஆடி வரும் இரண்டாம் கட்ட பருவமழைக்கு இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், மழை வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை 23 ஹெலிகாப்டர்களும், 200 படகுகளும் கூடுதலாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஆலுவா, காலடி, பெரும்பாவூர், மூவாற்றுப்புழா, சாலக்குடி போன்ற பகுதிகளில் தத்தளித்து வரும் மக்களை மீட்க உள்ளூர் மீனவர்களும் தங்கள் படகுகளுடன் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.

ஆனாலும்  பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் இன்னும் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதனிடையே கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், பாலக்காடு, கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய 8 மாவட்டங்களில் இன்று மிகபலத்த மழையும் என்றும் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்றும் வீசக்கூடும் எனவும்  இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் கேரள மக்கள் அச்சத்தின் பிடியில் சிக்கியுள்ளனர்.

click me!