
பயங்கர புயல் காற்றுடன் பெங்களூருவை புரட்டி எடுத்த கனமழை! கொளுத்திய வெயிலுக்கு இந்த குளிர்ச்சி என்ன சுகம் ? மகிழ்ச்சியில் பொது மக்கள் !!
கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு கனமழை கொட்டித் தீர்த்தது. பலத்த காற்றுடன் பெய்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து, குளிர்ச்சி நிலவியது. தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்திலும் இடியுடன் கன மழை பெய்தது.
கடந்த சில நாட்களாகவே கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்த நிலையில், வெயிலும் கடுமையாக கொளுத்தி வந்தது, தேர்தல் முடிந்து விட்ட நிலையில் பகல் முழவதும பெங்களூரு நகரை வெயில் வாட்டி வதைத்தது.
இந்நிலையில் மாலை திடீரென வானம் இருட்டியது. மேகங்கள் திரண்டன. சற்று நேரத்தில் பலத்த புயல காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்த மழை பெங்களூரு நகரையே புரட்டிப் போட்டுவிட்டது.
இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் நீரில் சிக்கி பழுதாயின. இதனால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த மழையால் பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குளிர்ச்சி நிலவியது.
கர்நாடகாவின் காவிரி நீர் பிடிப்பி பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் ஒகனேக்கல் பகுதியில் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
இதனிடையே தெலங்கானா தலைநகர் ஹைதிராபாத்தையும் கனமழை பதம் பார்த்தது. அங்கும் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக பெய்த மழையால், சாலைகளில் வெள்ளப் பெருக்கும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.