
காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கும், மூத்த தலைவர்களுக்கும் எதிராக பிரதமர் மோடி மிரட்டும் தொனியில் பேசி வருகிறார் என்று குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்துக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
கர்காடகாவில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது கடந்த 6 ஆம் தேதி பிரதமர் மோடி பேசுகையில், காங். தலைவர்கள் காது கொடுத்து கேளுங்கள். உங்களுக்குரிய எல்லையை மீறி நீங்கள் நடந்தால், நான் மோடி, அதன் பின் கடும் விளைவுகளையும், விலையையும் நீங்கள் சந்திக்கவும் கொடுக்கவும் நேரிடும் என்று பேசியிருந்தார்.
பிரதமர் மோடியின் இந்த மிரட்டும் தொனியைக் குறிப்பிட்டும், மோடியின் பேச்சடங்கிய வீடியோ ஆதாரத்தையும், காங்கிரஸ் தலைவர்கள், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அந்த கடிதத்தில், இதற்கு முன் பிரதமர் பதவி வகித்த அனைத்து உயர்ந்த மனிதர்களும், கண்ணியத்தையும், ஒழுக்கத்தையும் நிலைநாட்டி மக்களுக்கான கடமையை முறைப்படி ஆற்றிவிட்டு சென்றிருக்கின்றனர். அரசின் தலைமை பதவியில் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, மிரட்டும் தொனியிலும், எதிர்கட்சி தலைவர்களை எச்சரிக்கும் வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும் பேசுவார் என கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை.
கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்கள் காது கொடுத்து கேளுங்கள். உங்களுக்குரிய எல்லையை மீறி நடந்தால், நான் மோடி... அதன் பின் கடும் விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும் என்று பேசியிருந்தார். ஒரு நாட்டின் பிரதமர் இதுபோன்று வழக்கில் இல்லாத முறையில் பேசுவது கூடாது. காங்கிரஸ் தலைவர்களை மிரட்டும், அச்சுறுத்தும் வகையில் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. பிரதமரின் இதுபோன்ற பேச்சு, வெளிப்படையாகவோ, தனிப்பட்ட முறையில் இருந்தாலோ அதனை ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தையாகும். பிரதமரின் மிரட்டும் தொனியிலான பேச்சு அமைதிக்கு பெரும் குந்தகம் விளைவிக்கும்.
காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமின்றி வேறு எந்த கட்சித் தலைவர்களையும் மிரட்டும் தொனியில் பேசக்கூடாது என்றும், காங்கிரஸ் கட்சி மிகவும் பழமைவாய்ந்த கட்சி, இதுபோல பல மிரட்டல்கள், சவால்களை சந்தித்து வந்துள்ளது. ஆனால், காங்கிரஸ் தலைமை அதை பயமின்றி எதிர்கொண்டுள்ளது. காங்கிரஸ் கட்சியோ, அதன் தலைவர்களோ, இந்த மிரட்டல்களுக்கு பயப்படும் கோழைகள் இல்லை என்று மன்மோகன் சிங் அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.