தண்ணீரில் தத்தளிக்கும் கடவுளின் தேசம்… மண்ணோடு புதையுண்ட மக்கள்… வருத்தம் தெரிவித்த ராகுல்காந்தி!

By manimegalai aFirst Published Oct 16, 2021, 6:23 PM IST
Highlights

கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று வீடுகள், மற்றும் கடைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று வீடுகள், மற்றும் கடைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

கேரளாவை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளது. இதனால் கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் காலை முதலே கனமழை வெளுத்துவாங்குகிறது. நாளை வரை பல இடங்களில் கனமழை நீடிக்கும் என்பதால் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருவணந்தபுரம், கொல்லம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயத்தில் காலையில் இருந்து வெளுத்துவாங்கிய கனமழையால் மாவட்டமே தண்ணீரில் தத்தளிக்கிறது. வெள்ளத்தில் சிக்கிய பலர் கயிறு கட்டி பத்திரமாக மீட்கப்பட்டனர். கூட்டிக்கல் மலைப்பகுதியில் கனமழையை தொடர்ந்து இரண்டு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 3 வீடுகள் மட்டும் கடைகள் அடித்துச்செல்லப்பட்டு உள்ளன.

நிலச்சரிவில் பத்துக்கும் மேற்பட்டோர் புதையுண்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவர்களை தேடும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர். கனமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புப்படையினர் செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே கேரளாவின் நிலை குறித்து வயநாடு தொகுதியின் எம்.பி.-யும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல்காந்தி தமது கவலையை பகிர்ந்துகொண்டுள்ளார். டுவிட்டரில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி கேரள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.

click me!