ஹரியானா மாநிலத்தில் பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் வாபஸ் பெற்றுள்ளதால் அம்மாநில அரசு கவிழும் நிலையில் உள்ளது
ஹரியானா மாநிலத்தில் ஆளும் பாஜக அரசுக்கு அளித்த வந்த ஆதரவை சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் மூன்று பேர் வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். சுயேச்சை எம்எல்ஏக்கள் 3 பேரும் தங்களது ஆதரவை இந்தியா கூட்டணிக்கு அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுயேச்சை எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் முதல்வர் நயாப் சைனி தலைமையிலான ஆளும் பாஜக அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாக கூறி குடியரசுத் தலைவர் ஆட்சியை மாநிலத்தில் அமல்படுத்த வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
மொத்தம் 90 உறுப்பினர்களை கொண்ட ஹரியானா மாநில சட்டப்பேரவையில் தற்போது இரண்டு இடங்கள் காலியாக உள்ளன. முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார், பாஜகவில் இணைந்த சுயேச்சை எம்.எல்.ஏ. ரஞ்சித் சவுதாலா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அம்மாநில சட்டப்பேரவையின் பலம் 88 ஆக குறைந்துள்ளது. சட்டசபையின் தற்போதைய நிலவரப்படி பெரும்பான்மை பலம் 45 ஆக உள்ளது.
undefined
இந்த நிலையில், சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் ஹரியானாவில் ஆளும் பாஜக அரசின் பலம் 43ஆக குறைந்துள்ளது. பாஜக முதல்வர் நயாப் சைனி தலைமையிலான ஆளும் அரசுக்கு தற்போது 40 உறுப்பினர்கள் உள்ளனர். சுயேச்சை, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆளும் பாஜகவின் பலம் 46ஆக இருந்தது. தற்போது, சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால், அவையில் அதன் எண்ணிக்கை 43 ஆக குறைந்துள்ளது.
அதேசமயம், வாபஸ் பெற்ற 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் தவிர, ஹரியானா லோகித் கட்சி (எச்எல்பி) எம்எல்ஏ கோபால் காண்டாவின் ஆதரவு உள்பட இரண்டு சுயேச்சைகளின் ஆதரவு பாஜகவுக்கு உள்ளது.
ஹரியானாவின் 2019இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 40 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அந்த தேர்தலில் 10 இடங்களைக் கைப்பற்றிய ஜனநாயக் ஜனதா கட்சியும், பாஜகவும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தது. ஆனால், இரு கட்சிகளின் உறவில் விரிசல் ஏற்பட்டதையடுத்து, கூட்டணி உடைந்தது.
அதேசமயம், அந்த தேர்தலில் 7 சுயேச்சைகள் வெற்றி பெற்றிருந்தனர். அவர்கள் பாஜகவுக்கு ஆதரவு அளித்து வந்தனர். கடந்த மார்ச் மாதம், மாநிலத்தின் புதிய முதலமைச்சராக நயாப் சைனி பதவியேற்றபோதுகூட, சுயேச்சைகள் 6 பேர், ஹரியானா லோகித் கட்சியின் எம்.எல்.ஏ. ஒருவர் அவருக்கு ஆதரவு அளித்தனர்.
இந்த பின்னணியில் மூன்று சுயேச்சை எம்எல்ஏக்களான சோம்பிர் சங்வான் (தாத்ரி), ரந்தீர் சிங் கோலன் (புண்ட்ரி), மற்றும் தரம்பால் கோண்டர் (நிலோகேரி) ஆகியோர் பாஜக அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாகவும், காங்கிரஸுக்கு தங்கள் ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்தனர். ஹரியானா காங்கிரஸ் தலைவர் சவுத்ரி உதய்பன் மற்றும் ஹரியானா மாநில சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா முன்னிலையில் அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.
பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு தற்போது 30 எம்எல்ஏக்கள் உள்ளனர். காங்கிரஸ் கூட்டணியில், இந்திய தேசிய லோக்தளம் (ஐஎன்எல்டி) கட்சியின் ஒரு எம்.எல்.ஏ.வும், ஜனநாயக் ஜனதா கட்சிக்கு 10 எம்எல்ஏக்களும் உள்ளனர். தற்போது, சுயேச்சைகளின் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும் பட்சத்தில் காங்கிரஸ் கட்சியின் பலம் 45 ஆக உயரும்.